கும்பகோணம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 9 ஆசிரியர்களுக்கு தொற்று

கும்பகோணம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று 9 ஆசிரியர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதியானது.

இதுவரை மாவட்டத்தில் 16 பள்ளிகள் 5 கல்லூரிகளில் மொத்தம் 217 பேருக்குத் தொற்று ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று (30-ம் தேதி) வரை 119 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியை ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்கள் என 186 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்று (31-ம் தேதி) வெளிவந்த நிலையில் அதில் 9 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்துப் பாதிக்கப்பட்ட அனைவரும் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே