குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், பெரியகுளம் நகர உலமாக்கள் சபை மற்றும் அனைத்து இளைஞர் ஜமாத்தார்கள் கலந்துகொண்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசினுடைய ஏகோபித்த ஆதரவோடு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் மதுரை மெயின் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் அனுமதி கோரியிருந்தது.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று கூடினார்கள்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு குடியுரிமை சட்ட மசோதா நகலை தீயிட்டு கொளுத்தினார்கள்.

இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றார்கள்.

குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் பெரியகுளம் – மதுரை, பெரியகுளம் – தேனி ஆகிய பிரதான சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

நமது செய்தியாளர் : C. பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே