சட்டத் திட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்குத்தானா? முதல்வருக்கு இல்லையா? டிடிவி தினகரன்

சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமிழக முதலமைச்சருக்குப் பொருந்தாதா? கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வேண்டுமென்றே ஊருக்கு ஊர் கூட்டம் நடத்துவது சரியா என்று அமமுக பொதுச்செயலாளர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தமிழக முதல்வரின் இந்த கூட்டங்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமிழக முதலமைச்சருக்குப் பொருந்தாதா? கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வேண்டுமென்றே ஊருக்கு ஊர் கூட்டம் நடத்துவது சரியா?

5 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடக்கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமக்குப் பொருந்தாது என்ற நினைப்பில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது.

கொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

திட்டமிட்டு ஆட்களை கூட்டி வந்து சமூக இடைவெளி இன்றி அவர்களை நிற்க வைத்து வரவேற்பு என்ற பெயரில், அரசு பிறப்பித்திருக்கும் அத்தனை நோய் தடுப்பு விதிமுறைகளையும் மீறும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதே போன்றுதான் சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற முதலமைச்சரின் நிகழ்ச்சியிலும் நடந்து கொண்டார்கள்.

அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அ.தி.மு.க. தொண்டர்களைப் பற்றி முதலமைச்சர் பழனிசாமிக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா?

மேடைக்கு மேடை, ‘தனி மனித இடைவெளி அவசியம்’, ‘அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம்’, ‘பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்’ என்றெல்லாம் வசனம் பேசி வரும் முதலமைச்சர், அவ்வாறு மக்கள் கூடக்கூடாது என 144 தடைச்சட்டம் போட்ட முதலமைச்சர், தானே பொதுநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, தான் செல்லுமிடமெல்லாம் மக்களை திரட்டிவைப்பது ஏன்?

கொரோனா பரவலுக்கு பொதுமக்கள்தான் காரணம் எனச் சித்தரிக்கும் முதலமைச்சர், அதற்கு நேர்மாறாக தானே செயல்படுவது எப்படி சரியாக இருக்க முடியும்? சட்டதிட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? தமக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திவிட முடியாதா? ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ என்பது போலல்லவா இருக்கிறது பழனிசாமியின் இந்தச் செயல்பாடு.

மாவட்டத்திற்கு மாவட்டம் இந்தக்கொடுமை போதாதென்று, முதலமைச்சர் பழனிசாமி செல்லுமிடம் எல்லாம் மணிக்கணக்கில் போக்குவரத்தை நிறுத்திவைத்து, ஏற்கனவே கொரோனாவால் நொந்து போயிருக்கும் மக்களை வாட்டி வதைக்கிறார்கள்.

அதிகாரம் தரும் தடுமாற்றத்தில் போடும் இந்த ஆட்டங்களை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

அவர்களுக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், என்று டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே