மறைந்த ஜெயலலிதாவின் படம் பொறித்த மோதிரம் , காதணி , கை வளையல்களுடன் நடமாடும் நகைக்கடையாக நகர்வலம் வரும் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கற்பகம், நகைகள் அணிவதில் ஹரிநாடார்லாம் தனக்கு ஜூனியர்தான் என்று கூறுகிறார்.

அ.தி.மு.க முன்னாள் தலைவரும் மறைந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் உண்டு.

‘எங்கள் அம்மா உத்தரவிட்டால், எந்த தடையையும் தகர்ப்போம் ‘ என்று சூளுறைக்கும் தொண்டர்கள் படையும் அவருக்கு உண்டு.

அத்தகையை தொண்டர்களில் பெண்கள் படை தளபதிதான் இந்த கற்பகம்.

சென்னை மாநகராட்சி 111- வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் இவர். கற்பகம் போட்டிருக்கும் நகைகளிலும் கூட ஜெயலலிதா பெரிய பெரிய வடிவங்களில் இடம் பெற்றுள்ளார்.

காதில் தொங்கும் தோடு முதல் மூக்குத்தி வரை கற்பகம் அணியும் நகைகளில் ஜெயலலிதாவின் உருவமும் இடம் பெற்றுள்ளது.

கையில் அணிந்திருக்கும் பெரிய சைஸ் தாமிரக்கனி ஸ்டைல் மோதிரங்களிலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர். காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ தாமிரக்கனியும் அவர் அணியுன் பிரமாண்ட சைஸ் மோதிரங்களும்தான் பாப்புலர்.

இப்போது, தாமிரக்கனியின் வெற்றிடத்தை இந்த கற்பகம் நிரப்பியுள்ளார் என்றே சொல்லலாம்.

அதிமுகவின் தென் சென்னை மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் கற்பகம் , தான் அணியும் நகைகள் மூலம் கட்சியினரிடையே பிரபலமானவர்.

நகைகள் மட்டுமல்ல வீடு முழுவதுமே ஜெயலலிதாவின் புகைப்படங்களால்தான் நிரம்பி இருக்கின்றன. த

ீவிர அதிமுக விசுவாசியான கற்பகம் தனது 12 வயதிலிருந்து அந்த கட்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சாதாரண குப்பம் ஒன்றில் பிறந்த தன்னை 2011 ல் கவுன்சிலராக்கிய ஜெயலலிதா ரிப்பன் மாளிகையில் கொடியேற்றும் வாய்ப்பு வழங்கியதாக நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.

வரிச்சியூர் செல்வம் , ஹரி நாடார் என ஏற்கனவே பல நடமாடும் நகைக்கடைகளை கண்டு, உங்களுக்கு நகைகள் அணியும் ஆசை வந்ததா என்று கற்பகத்திடம் கேட்டால், ‘ ஹரி நாடாரை நேரில் பார்த்தே பல ஆண்டுகளாவதாகவும் , போஸ்டரில் மட்டுமே தற்போது பார்ப்பதாகவும் ,ஹரி நாடாருக்கு முன்னரே நான் இது போன்று நகைகள் அணிகிறேன். எனக்கெல்லாம் அவர் ஜூனியர்தான்’ என்கிறார்.

தங்க நகைகள் அணிவதை ஜெயலலிதா நிறுத்தி விட்ட நிலையில் அவரின் படம் பொறித்த இத்தனை நகைகள் அணிவது அவசியமா என்று கேட்டால், ‘தங்கத் தாரகையை தங்கத்தில் சுமப்பதுதான் பொருத்தமாக இருக்கும் ‘ என்று சட்டென்று அவரிடத்தில் இருந்து பதில் வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே