கிரெடிட் கார்டு கடன்களுக்கும் இஎம்ஐ நிறுத்தப்பட்டுள்ளதா? கேள்விகளும்… பதில்களும்..!

ரிசர்வ் வங்கியின் கடன் வசூல் தடை அறிவிப்பு தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கான கேள்விகளும், பதில்களும்…

கொரானா தடுப்பு நடவடிக்கையின் தாக்கம் தினக்கூலி பணியாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, பல்வேறு பொருளாதார அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த வகையில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வங்கிகள் கடன் வசூலை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை. மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கான கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு தொடர்பாக பல கேள்விகள் உங்களுக்கு எழுந்திருக்கும். அதற்கான பதில்கள் கீழே..

கேள்வி: கடன் வசூல் நிறுத்தி வைக்கும் அறிவிப்பு தேசிய வங்கிகளுக்கு மட்டும்தான் பொருந்துமா?

பதில்: பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.

கேள்வி: 3 மாதங்கள் கழித்து மொத்தக் கடன் தொகையையும் செலுத்த வேண்டுமா?

பதில்: இல்லை. வரும் 3 மாதங்கள் மட்டுமே இ.எம்.ஐ செலுத்த வேண்டாம். அதற்கு அடுத்து, வழக்கம் போல, ஒரு மாதத்திற்கான தொகையை ஒவ்வொரு மாதமும், உங்களுக்கான கடன் தவணை காலம் முடியும் வரை செலுத்த வேண்டும்.

கேள்வி: நான் 6 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும் என்றால், இப்போது 3 மாதங்கள் மட்டும் செலுத்தினால் போதுமா?

பதில்: இல்லை. உங்கள் கடனை செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே, 3 மாதங்கள் கழித்து அதே கடன் தொகையை 6 மாதத்திற்கு செலுத்த வேண்டும்.

கேள்வி: இ.எம்.ஐ செலுத்த வில்லை என்றால் CIBIL மதிப்பெண் குறையாதா?

பதில்: கடன் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கையோ, CIBIL மதிப்பெண்ணை குறைக்கும் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கேள்வி: உங்களது இஎம்ஐ 3 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவது எப்படி?

தவணை முறையை இடைநீக்கம் செய்ததற்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. வெளியான பின்னர்தான் இதுகுறித்தத் தெளிவு கிடைக்கும்.

கேள்வி: ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை வங்கிகள் பின்பற்றுவதற்கான நடைமுறை என்ன?

ஒவ்வொரு வங்கியும் தத்தமது நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஆலோசித்து ரிசர்வ் வங்கியின் உத்தரவை நடைமுறைப்படுத்துவர். அந்தந்த வங்கியின் போர்டு கவுன்சில் அனுமதி அளித்த பின்னர்தான் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் இஎம்ஐ தற்காலிக நிறுத்திவைப்பு குறித்துத் தகவல் அளிப்பர்.

கேள்வி: இஎம்ஐ நிறுத்திவைப்பு எந்தவித கடன்களுக்கு எல்லாம் பொருந்தும்?

ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி வீட்டுக்கடன், தனிநபர்க் கடன், கல்விக்கடன், வாகனக் கடன் என கால நிர்ணயம் கொண்ட அத்தனைக் கடன்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். கூடுதலாக மொபைல், வீட்டு உபயோகப் பொருட்களுக்காக வாங்கிய கடன்களுக்கும் இந்த இஎம்ஐ நிறுத்த உத்தரவு பொருந்தும்.

கேள்வி: கிரெடிட் கார்டு கடன்களுக்கும் இஎம்ஐ நிறுத்திவைக்கப்படுமா?

கிரெடிட் கார்டுகளுக்கு இ எம் ஐ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ப்ராஜெக்ட் லோன் எடுத்திருந்தால் இஎம்ஐ கட்ட வேண்டுமா?

ப்ராஜெக்ட் லோன் என்பது தொழிற்சாலை கட்டுவதற்கோ, வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்காகவோ வாங்கப்படும் கடன். அத்தனை டேர்ம் லோன்களுக்கும் இஎம்ஐ நிறுத்தம் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் விதி. ஆனால், ப்ராஜெக்ட் லோன் எடுத்திருக்கும் உங்களின் நிலை தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டு அதை உங்கள் வங்கி உணர்ந்து நீங்கள் இஎம்ஐ செலுத்த வேண்டாம் எனத் தெரிவித்தால் உங்களுக்கு நன்மை.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே PDF FILE வடிவத்தில் உறுதி செய்ய டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே