காணொலி அழைப்பு மூலம் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரா காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், செல்லிடப்பேசி காணொலி காட்சி மூலமாக பொது மக்கள் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, சென்னை பெருநகரில் கரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட் செவி (வாட்ஸ் அப்) எண்ணில் காணொளி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களில் மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணி வரை புகார் தெரிவித்து பயனடையலாம் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, (03.07.2020) வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிமுதல் 1.00 மணிவரை மேற்கண்ட கட்செவி (வாட்ஸ்அப்) எண்ணில் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்து பயனடையும் படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.