கருணாநிதிக்கு கோபம் வந்தால் அவர் ஒரு காட்டுமிராண்டி: பழ.கருப்பையா பேட்டி

“”எனது எழுத்தும், பேச்சும் முதல்வர் கருணாநிதிக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் தான், நான் தாக்கப்பட்டுள்ளேன், கருணாநிதிக்கு கோபம் வந்தால் அவர் ஒரு காட்டுமிராண்டி,” என பழ.கருப்பையா தெரிவித்தார்.

அ.தி.மு.க., இலக்கிய அணி மாநிலத் தலைவர் பழ.கருப்பையா. இவரது வீடு சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் உள்ளது. கடந்த 27ம் தேதி மாலை 3.30 மணி அளவில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், வெளியே நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். வரவேற்பு அறையில் இருந்த கருப்பையாவை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை பற்றி கருப்பையா “நமது’ நிருபரிடம் கூறியதாவது: கடந்த 27ம் தேதி மதியம் 2.30 மணிக்கு தமிழ்வாணன் என்பவர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டார். “நான் உங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும்’ என்றார். “நான் வீட்டில் தான் இருக்கிறேன். நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை’ என்றேன். மாலை 3.30 மணிக்கு திபுதிபுவென்று 6 பேர் வீட்டிற்குள் புகுந்தனர். கார், நாற்காலிகளை அடித்து உடைத்தனர்.

“டேய் கலைஞரைப் பற்றி என்னடா பேசுற? நீ பெரிய எழுத்தாளனா?’ என கூறிக் கொண்டே என் முகத்தில் குத்தினர். வெளியே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் வீட்டுக்குள் ஓடிவந்ததும், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். உடனே ஜெயலலிதா என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். “கருணாநிதி பெரிய எழுத்தாளர் என்று சொல்கிறார். உங்கள் எழுத்துக்கு பதில் சொல்ல அவருக்கு திராணி இல்லை. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு பின்னால் நான் இருக்கிறேன்’ என்றார். அப்போது எனக்கு ஏற்பட்ட வேதனை தீர்ந்து விட்டது. அதேபோல் மதுசூதனன், பொன்னையன், சுலோச்சனா சம்பத், அன்வர்ராஜா, சேகர்பாபு, செந்தமிழன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பலர் நேரில் வந்து ஆறுதல் கூறினர்.

“கருணாநிதி என்ன கடவுளா? செம்மொழி மாநாட்டிற்கு தமிழ்தாய் வரமாட்டாள்’ என்ற கட்டுரைகளை எழுதினேன். தொலைக்காட்சியில் பேசினேன். ஈழத்தை அழித்து விட்டும், மயானமாக்கி விட்டும் கோவையில் என்ன கொண்டாட்டம் எனக் கேட்டேன். கருணாநிதிக்கு கோபம் வந்ததால் நான் தாக்கப்பட்டேன்.

மொழி என்பது வெறும் மொழியா? அது முகமல்லவா. இனத்தை அழித்து விட்டு மொழிக்கு என்ன மாநாடு? நாடு என்பது வெறும் மண்ணா? அது வாழும் மக்கள் அல்லவா? மக்களை அழித்து விட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வது மடமை அல்லவா?

நான்காம் ஈழப்போர் நடக்கும் போது, கருணாநிதி தயவில் தான் மத்திய அரசு இயங்கியது. சிங்களருக்கு உதவி செய்தால், எங்களுடைய ஆதரவை திரும்ப பெறுவோம் என, கருணாநிதி சொல்லியிருந்தால் போதும். மத்திய அரசு செயல்பட்டிருக்க முடியாது. அதையும் மீறி செயல்பட்டால், தனது ஆதரவை திரும்ப பெற்று, மத்திய அரசை கவிழ்த்திருக்க முடியும். தமிழினத்தை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. போரை நிறுத்து என்று, காலையில் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். போர் நின்று விட்டது என்று கூறிவிட்டு, மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றார். ஆடாத நாடகம் ஆடி, ஈழம் அழிவதற்கு காரணமாக இருந்தார். ஈழத்தை சுடுகாடாக ஆக்கி விட்டு, சிவதம்பியை அழைத்து வந்து மாநாடு நடத்தி விட்டால், துரோக கறை கழுவப்பட்டு விடுமா? மாநாடு நடத்துவது தமிழினத்திற்கு செய்த துரோகத்தை மறைக்கத்தானே.

கருணாநிதியின் பலம் கோபாலபுரத்தில் இல்லை. கோட்டையில் தான் இருக்கிறது. எனக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, அடியாட்களை கருணாநிதி அனுப்பியுள்ளார். வரலாறு அவருக்கு பாடம் கற்பிக்கும். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கருணாநிதி ஏவிய ஆட்களை, அவரே எப்படி கைது செய்வார்? இவ்வாறு பழ.கருப்பையா கூறினார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே