காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணி வன்முறை வெடித்தது.

அதில், விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். ஆனால், போலீசார் சுட்டதில் விவசாயி உயிரிழந்ததார் என தவறாக வெளியான தகவலை, சசிதரூர் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவு செய்தனர்.

ஆனால், டிராக்டர் பேரணியின் போது டில்லி போலீசார் ஒரு துப்பாக்கி குண்டை கூட சுடவில்லை.

விவசாயி டிராக்டர் கவிழ்ந்தே உயிரிழந்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கமளித்து, அது குறித்த வீடியோவையும் வெளியிட்டனர்.

இதனையடுத்து சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் உள்ளிட்டோர் மீது சிலர் அளித்த புகாரின் பேரில், சில மாநிலங்களில் தேச துரோகம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு மற்றும் புகார் அளித்தவர்கள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

அப்போது, சசிதரூர் சார்பில் ஆஜரான கபில் சிபல், மனுதாரர்களை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள், சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோரை கைது செய்ய இரண்டு வாரம் தடை விதித்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே