ரவுடிகள் மீது காட்டும் அக்கறையை போலீசார் கொல்லப்படும்போது ஏன் காட்டுவதில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி

ரவுடிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், காவலர்கள் பலியாவது குறித்து அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆணையம் ஏன் பேசுவதில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

ரவுடிகள் இறக்கும்போது அக்கறை காட்டும் மனித உரிமை ஆணையங்கள், காவல்துறையினர் இறக்கும்போது காட்டுவதில்லை என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிப்பதற்கு கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வேலு என்பவர் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வேலுவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தின் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி குழுக்கள் குறித்த விவரங்களையும்; அவர்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வின் முன்பாக, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு டிஜிபி-யின் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதில் மகாராஷ்டிரா, கர்நாடகா போல தமிழகத்தில் சட்ட விரோத செயல்களை செய்யும் கும்பல்களோ, தீவிரவாதிகளோ இல்லை என தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அந்த மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள “திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டத்தை” தமிழகத்தில் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

2018ஆம் ஆண்டு சூழலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை என்பதால், மீண்டும் தற்போதைய டிஜிபியிடம் அறிக்கை பெற்று தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், ரவுடிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சூழல் அதிகரித்து வருவதாகவும், இந்த நிலை தொடங்கிவிட்டாலே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.சென்னை உயர் நீதிமன்றம்

மேலும் கடந்த வாரம், தூத்துக்குடி வல்லநாடு பகுதியில், ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடி குண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மரணம் குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், சமுதாயத்திற்காக உயிர்நீத்த அவரின் இழப்புக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏன் பேசவில்லை எனவும் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

2019ல் மணப்பாறையில், குழந்தை சுஜித் வில்சன் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கி உயிரிழந்த போதும், சாத்தான்குளம் காவல் நிலைய வன்முறை குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கது தான் என தெரிவித்த நீதிபதிகள்,அங்கு மட்டும் வரிசையாக சென்று ஆறுதல் தெரிவித்து லட்சங்களில் நிதியுதவி அளித்த எதிர்க்கட்சிகள், காவலர் சுப்பிரமணியன் மறைவு குறித்து வாய் திறக்கவே இல்லை எனவும் காவலர் உயிர் மட்டும் அவர்களுக்கு உயிராக தெரியவில்லையா என கேள்வி எழுப்பினர்.

அந்த காவலரின் மரணத்திற்கு தமிழக முதலமைச்சர் மட்டும் 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாக நினைவு கூர்ந்த நீதிபதிகள், அரசு நிர்வாகத்தை தாண்டி மற்ற அரசியல் கட்சிகளும் இது போன்ற சம்பவங்களில் குடும்பத்திற்கு முன் நின்று உதவினால் தான், நம்பிக்கையோடும், துணிவோடும் காவலர்கள் பணியாற்ற உத்வேகமாக அமையும் என தெரிவித்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே