கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகவுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

எனினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இந்திய அளவில் தொற்று பாதிப்பில் 4வது இடத்தில் உள்ள தமிழகத்தில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ், கூடுதல் கட்டுப்பாடுகள் வருவதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது, “கட்டுப்பாடுகள் குறித்து நாளை அறிவிக்க உள்ளேன். உதாரணத்திற்கு, உணவகங்களில் சாப்பிடுவதற்கான அனுமதி இல்லாமல் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு நாளை வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கின்போதும் பார்சல் வாங்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது கட்டுப்பாடு மீண்டும் அமலானால் ஓட்டல் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கும், அதே சமயம் உணவுக்காக ஓட்டலை நம்பி சென்னையில் பணியாற்றுபவர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதே நிதர்சனம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே