யானைகள் உயிரிழப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது – வனத்துறை

யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு யானை மட்டுமே சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, மற்ற யானைகள் உடல் நலக்கோளாறு, யானைகளுக்குள் நடந்த மோதல் போன்ற காரணங்களாலேயே உயிரிழந்துள்ளன என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:

‘கோயம்புத்தூர் வனக்கோட்டம் 69,000 எக்டர் பரப்பளவு கொண்டது. மொத்தம் 7 வனச் சரகங்கள் உள்ளது.

கடந்த 10 நாட்களில் 12 யானைகள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் இறந்துள்ளதாக செய்தியை சிலர் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவுகளிலும் வெளியிட்டு வருகிறார்கள்.

இவ்வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் (180 நாட்களில்) 14 யானைகள் இறந்துள்ளன. 

அதில் 13 யானைகள் நோய் மற்றும் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களால் தான் இறந்துள்ளன.

இவ்வாறு இறந்த யானைகளை மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட வன அலுவலர், வனப்பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவர் மற்றும் அரசு கால்நடை மருத்துவர்களால் உடற்கூறாய்வு செய்யப்பட்டு இறந்ததிற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காட்டில் 25.2.2020 அன்று கண்டறியப்பட்ட இறந்த பெண் யானையினை அன்றே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் ஜீரணப்பாதைக் கோளாறு காரணமாக இறந்ததாக அறியப்பட்டது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிறுமுகை, போளுவாம்பட்டி மற்றும் காரமடை வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் முறையே 6.4.2020, 15.4.2020, 16.4.2020 மற்றும் 18.4.2020 ஆகிய தினங்கிளில் இறந்த 3 ஆண் யானைகள் மற்றும் 1 பெண் யானையினை அன்றைய தினங்களிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் முறையே இயற்கை உபாதை, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வெப்ப அழற்சி, மூளை ரத்தக்கசிவு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு கோளாறு காரணமாக இறந்ததாக அறியப்பட்டது.

2020-ஆம் ஆண்டு மே மாதத்தில், சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் 10.5.2020 மற்றும் 14.5.2020 ஆகிய தினங்களில் இறந்த 2 பெண் யானைகளை அன்றைய தினங்களிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் முறையே கர்ப்பப்பையில் உள்ள கருவளர்ச்சி கோளாறு மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இறந்ததாக அறியப்பட்டது.

2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் 1.6.2020, 4.6.2020, 22.6.2020, 23.6.2020 மற்றும் 25.6.2020 ஆகிய தினங்களில் இறந்த 2 ஆண் மற்றும் 3 யானைகளை அன்றைய தினங்களிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் முறையே உயரமான பகுதிகளில் இருந்து கீழே பள்ளத்தில் விழுந்த விபத்து காரணமாக, இயற்கை உபாதை, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கல்லீரல் சிதைவு நோய் போன்ற காரணங்களால் இறந்ததாக அறியப்பட்டது.

2020-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காட்டில் 2.7.2020 அன்று கண்டறியப்பட்ட இறந்த பெண் யானையினை அன்றே உடற்கூறாய்வு செய்யப்பட்டதில் ஜீரணப்பாதைக் கோளாறு காரணமாக இறந்ததாக அறியப்பட்டது.

மேலும், 2.7.2020 அன்று மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காட்டை ஒட்டியுள்ள விளைநிலத்திற்குள் ஒரு யானைக்கூட்டம் புகுந்து பயிர் சேதாரத்தை ஏற்படுத்திய தருணத்தில் தோட்ட உரிமையார்கள் அந்த யானைகளை விரட்ட துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் யானை இறந்துள்ளது.

இச்செய்தியை அறிந்த உடனேயே மாவட்ட வன அலுவலர் அடங்கிய குழு உடனடியாக யானையை சுட்ட ராமசாமி (வயது 55) மற்றும் கிருஷ்ணசாமி (வயது 66) ஆகிய இருவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்கள்.

வனவிலங்குகளின் பிறப்பு மற்றும் இறப்பு என்பது இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

இருப்பினும் யானைகள் பாதுகாப்பு மற்றும் வருங்காலங்களில் யானைகளின் வாழ்விடத்தை மேம்படுத்துதல் மற்றும் உயிரிழப்பைக் குறைத்தல் போன்ற பல்வேறு காரணங்களை கண்டறிய யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு வனத்துறை முதன்மை லைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பரிந்துரைன் பேரில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பத்திரிகைகள், ஊடகங்கள், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக வந்த செய்திகள் முற்றிலும்உண்மைக்கு புறம்பானவையாகும்’.

இவ்வாறு வனத்துறை தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே