தமிழ்நாட்டில் இன்புளுயன்ஸா காய்ச்சல் அதிகரித்து உள்ள நிலையில், அதன் அறிகுறிகள், பாதிப்பு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பருவ மழை தொடக்கி உள்ள நிலையில், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
தலைநகர் சென்னையில் கூட கடந்த சில நாட்களாக அதிகமான நபர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டமும் அதிகரித்து உள்ளது.
அமைச்சர் மா.சு
இது தொடர்பாகச் சமீபத்தில் விளக்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பருவ மழைக் காலத்தில் இன்புளுயன்ஸா போன்ற காய்ச்சல் வருவது இயல்பு தான். இரு ஆண்டுகளாக கொரோனாவால் நாம் கடைப்பிடித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காய்ச்சல் பெரிதாகத் தெரியவில்லை. இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அதிகரித்து உள்ளது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது” என்று கூறி இருந்தார்.
இன்புளுயன்ஸா காய்ச்சல்
நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் மொத்தம் 47 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு மோசமாக உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் விடுமுறை அளிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை என்று அமைச்சர் மா.சு தெரிவித்து இருந்தார்.
உயிருக்கு ஆபத்து
தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் இந்த இன்புளுயன்ஸா காய்ச்சல் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இன்புளுயன்ஸா என்பது சுவாச மண்டலத்தைத் தாக்கும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலைத் தாக்கும் இது பெரும்பாலும் தானாகச் சரியாகிவிடும். அதேநேரம் சிலருக்கு உரியச் சிகிச்சை தேவைப்படலாம் இல்லையென்றால் உயிருக்கே கூட ஆபத்தான நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
யாருக்குத் தீவிர பாதிப்பு
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாக 6 மாதங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பாதிப்பு மோசமாக இருக்கும். அதேபோல 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், புதிதாகக் குழந்தை பெற்றுக் கொண்டவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
மேலும், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக உள்ளவர்கள், ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் மற்றும் நீரிழிவு பாதிப்பு உடையவர்களுக்கும் பிஎம்ஐ 40-க்கு மேல் இருக்கும் அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
அதிகரிக்கும்
சாதாரண சளி போலவே இதற்கும் அறிகுறிகள் இருக்கும். மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டைப் புண் எனச் சளியின் அறிகுறிகள் தான் இதற்கும் இருக்கும்.
ஆனால், சளி அறிகுறிகள் மெல்லவே வெளிப்பட்ட தொடங்கும். ஆனால், இன்புளுயன்ஸா காய்ச்சல் அறிகுறிகள் திடீரென அதிகரிக்கும். மேலும், காய்ச்சல் சமயத்தில் உடல்நிலை மிகவும் மோசமாகும். தேவைப்பட்டால் இதற்குத் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.
அறிகுறிகள்
காய்ச்சல், தசைகள் வலி, குளிர் மற்றும் வியர்வை, தலைவலி இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். சிலருக்கு உலர்ந்த மற்றும் நீடித்த இருமலும் மூச்சுத் திணறலும் கூட ஏற்படும்.
சோர்வு மற்றும் பலவீனம் உணர்வது, மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, கண் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பும் இருக்கும். வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தான் இருக்கும் பெரியவர்களுக்கு இருக்காது.
எப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும் ?
பெரும்பாலும் இன்புளுயன்ஸா காய்ச்சல் தானாகச் சரியாகிவிடும். ஆனால், பாதிப்பு அதிகரித்தாலோ அல்லது இணை பாதிப்புகள் இருந்தாலோ நாம் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்.
சாதாரண ஆண்டி வைரஸ் மருந்துகள் பாதிப்பைக் குறைத்து, தீவிர பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும். மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, மயக்கம், வலிப்பு உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்.
குழந்தைகள்
அதேபோல பலவீனமாக உணர்வது, கடுமையான தசை வலி இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். தமிழகத்தில் குழந்தைகளுக்கு மத்தியிலும் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்குச் சுவாசிப்பதில் சிரமம், உதடுகள் நீல நிறத்தில் மாறுவது, நெஞ்சு வலி, நீரிழப்பு, தசை வலி, வலிப்பு உள்ளிட்டவை வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.