பதிவுத்துறை மூலம் போலி ஆவணங்களால் மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை, பாதிக்கப்பட்ட உண்மையான நில உரிமையாளர்களுக்கு மீட்டு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் பதிவுச் சட்டம் 1908-ல் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை தொடங்கி வைக்கும் விதமாக போலி ஆவண பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் 5 பேருக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடி செய்யப்பட்டு, ஆவணப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, போலி ஆவண பத்திரப்பதிவால் இழந்த ரூ.8 கோடி மதிப்பிலான நிலத்தை மீண்டும் தனதாக்கிக் கொள்ளும் வகையில், அந்த போலி ஆவணப் பதிவை ரத்து செய்தமைக்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும் அதிக ஆவணங்கள் பதிவாகும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படும்போது இணைய வழியில் விண்ணப்பித்து திருத்திய சான்றினைப் பெறும் வசதி ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து TRB மூலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் & சிறப்பு பயிலரங்கங்களில் பணியாற்றத் தேர்வான 1,024 விரிவுரையாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் பொன்முடி, அதிகாரிகள் இறையன்பு, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்கான தங்கும் இடம், ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணியையும் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் இறையன்பு, சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.