புதுவையில் புதிதாக 64 பேருக்கு தொற்று- ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளை முதல் மீண்டும் கரோனா பரிசோதனை

புதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதியானது. கரோனா அதிகரிப்பால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளை முதல் மீண்டும் பரிசோதனை துவங்குகிறது.

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரிப்பால் நாளை முதல் 1 முதல் 11ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதுச்சேரி நிலை தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் அருண் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் 1,238 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் புதுச்சேரி – 40, காரைக்கால் – 19, ஏனாம் – 1, மாகே – 4 பேர் என மொத்தம் 64 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் பட்டினம் காந்தி சாலையை சேர்ந்த 64 வயது முதியவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40,386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,316 (97.35 சதவீதம்) ஆக உள்ளது.

கரோனா தடுப்பூசியை சுகாதார பணியாளர்கள் 19,627 பேர் (46 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 7,146 பேர் (34 நாட்கள்), பொதுமக்கள் 17,393 பேர் (18 நாட்கள்) என மொத்தம் 44,166 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் கரோனா பரிசோதனை

கரோனா பரவல் தொற்று அதிகரித்த கடந்த ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இதற்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் ஒப்பந்தத்தை நீடிக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் கடந்த ஒரு மாதமாக வேலையை தொடர முடியவில்லை இதன் எதிரொலியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது

தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுழற்சிமுறையில் கரோனா பரிசோதனை சோதனை தொடங்கப்பட்டுள்ளது குயவர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடந்தது ஏராளமானவர்கள் பரிசோதனை செய்தனர்

இதுபற்றி துணை இயக்குனர் பொது சுகாதாரம் டாக்டர் முரளி கூறும்போது,”நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து சுகாதார நிலையங்களிலும் கரோனா பரிசோதனை முகாம் மீண்டும் தொடங்கப்படும். ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே