கரோனா தடுப்பூசி, பரிசோதனைக்குத் தட்டுப்பாடு இல்லை: புதுவை ஆளுநர் தமிழிசை

கரோனா தடுப்பூசி, பரிசோதனைக்கு தட்டுப்பாடு இல்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தி தொடக்க விழா இன்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்தது.

இதையடுத்து ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

”பக்கத்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் இங்கு கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளோம். தடுப்பூசி போட்டால் கரோனா வராமல் தடுக்கும். ஒருவேளை தொற்று வந்தால் கூட வீரியமாக இருக்காது. பல மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. புதுவையில் நாம் பயப்படத் தேவையில்லை. இருப்பினும், நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம்.

அரசியல் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியுங்கள், சமுக இடைவெளிடையை கடைப்பிடியுங்கள் என அறிவுறுத்துமாறு காவல்துறையினரிடம் ஏற்கெனவே கூறியுள்ளோம். இந்த நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வதுடன் கையில் சானிடைசர் வைத்துக்கொள்ள வேண்டும்.

புதுவையில் தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் போடும் அளவுக்குத் தடுப்பூசி உள்ளது. அதேபோல், பரிசோதனைக்கும் தட்டுப்பாடு கிடையாது. சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுகைகள் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. எதற்கும் தட்டுப்பாடு கிடையாது” .

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே