கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு தோல்வி : ராகுல் காந்தி

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்தது தெளிவாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காணொலி காட்சி வாயிலாக ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பிரதமர் மோடி எதிர்பார்த்தப் பலன் கிட்டவில்லை.

தற்போது மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவானது, இந்தியாவில் ஊரடங்கை தளர்த்துவது என்பதே.

ஆனால் இது எந்த வகையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் உதவும் என்று தெரியவில்லை.

ஏழை மக்களின் தற்போதைய தேவை பணம்தான். அதனை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.

அவ்வாறு செய்யாவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

ஏழை மக்களுக்கும், தொழிற்துறைக்கும் மத்திய அரசு நிதியுதவி செய்யாவிட்டால், அது மோசமான நிலையை உருவாக்கிவிடும்.

மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், மத்திய அரசின் உதவி கிடைக்காமல் செயல்படுவது என்பது மிகவும் கடினமானது என்று ராகுல் கூறியுள்ளார்.

ஊரடங்கில் இருந்து நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது கிடைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதற்கு அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசின் திட்டம் என்ன?

பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கவும், நிதியுதவி அளிக்கவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இல்லையென்றால், பெரிய இழப்பு ஏற்படும்.

நாட்டின் ஆன்மா மற்றும் பலமாக உள்ள ஏழை மக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

நம்மை பற்றி மற்ற நாடுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நாட்டின் ஆன்மா மற்றும் பலத்தை பாதுகாக்க வேண்டும்.

அரசு அறிவித்தது அனைத்தும் கடன் திட்டங்களாக தான் இருக்கிறது. மக்களுக்கு உடனடிதேவை நிதியுதவி தான். கடனுதவி இல்லை.

எல்லையில் என்ன பிரச்னை, அங்கு என்னநடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும். தற்போது யாருக்கும் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

நேபாளம், லடாக்கில் என்ன நடந்தது எப்படி என்பது குறித்தும், தெளிவாக விளக்க வேண்டும்.

எங்கு போய் வேலை பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதனை மாநில அரசுகள் முடிவு செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே