சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றுகிறார்.
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
நிகழ்ச்சிக்கு வரும் முதலமைச்சரை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வருகின்றனர். கோட்டை கொத்தளத்தின் முன் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்வார்.
பின்னர் 8.33 மணிக்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்பார். திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை முதலமைச்சர் பார்வையிடுவார். 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை அவர் ஏற்றி வைப்பார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்படும்.
பின்னர் சுதந்திர தின உரையை நிகழ்த்திவிட்டு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை வழங்குவார். விருது பெற்றவர்களுடன் 9.34 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்வார். 9.39 மணிக்கு கோட்டையில் இருந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்வார்.
கொரோனா தொற்று காரணமாக விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமர வசதியாக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே தனிமனித இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.