அதிகரிக்கும் கரோனா; சவாலாக மாறி வருகிறது- மக்கள் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்: ஜெ.ராதாகிருஷ்ணன் வேதனை

கரோனாவுக்காக முக்கவசம் அணியும் விவகாரத்தில் மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சுய மாற்றம் தேவை எனவும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 56 மாணவிகளுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிக்கு இரு வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்துச் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ”எல்லா மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று 450, 500 என அதிகரித்து வருவது திருப்தி அளிக்கவில்லை என்று கூறியிருந்தேன். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்தது இப்போது சவாலாக மாறி வருகிறது.

இதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் அறவே மாஸ்க் அணியாமல் செல்வதுதான். ஏன் நீங்கள் அபராதம் விதிக்கலாமே என்று கேட்கிறார்கள். ஒரு நபரோ, ஒரு துறையாலோ இதைக் கட்டுப்படுத்திவிட முடியாது. பொது இடங்களுக்கு வந்தாலே முகக் கவசம் அணியவேண்டும்; கூட்டம் கூடினால் முகக் கவசம் அணியவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும்.

நாங்கள் தி.நகரில் பரிசோதனை செய்யச் செல்லும்போது முகக்கவசத்தை அணிகிறார்கள். அந்தப் பக்கம் சென்றதும் கழற்றி விடுகிறார்கள். நிறையப் பேருக்கு அபராதமும் விதித்திருக்கிறோம். முகக் கவசம் அணியாததற்கான அபராதம் மட்டுமே ரூ.11 கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஏமாற்றுகிறார்கள். அப்படிச் செய்து தங்களைத் தாங்களே மக்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மக்களிடம் மன மாற்றம் தேவை.

அண்மைக் காலங்களில் கோயில் வழிபாடுகள், திருமணங்கள், குடும்ப விழாக்களில் விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதுதான் மகாராஷ்டிராவில் நடந்தது. தற்போது காவல் துறை, வருவாய்த் துறை, பொது சுகாதாரத் துறையில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டுள்ள்ன.

தயவுசெய்து மக்கள் இதை ஒழுங்குமுறைச் சட்டமாகப் பார்க்காமல், சுய ஒழுங்காகப் பாருங்கள். ஏனெனில் உலக அளவில் கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டாலே 30 பேருக்குப் பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது. இதில் 5 பேருக்குத் தொற்று ஏற்படுகிறது. இதனால் மக்கள் பதற்றப்பட வேண்டாம். அதே நேரத்தில் முகக்கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும்.

பொது மக்கள் டிசம்பர் மாதம் வரை அளித்த ஒத்துழைப்பை மீண்டும் தொடர்ந்து அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே