மதுரையில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதி போதுமான அளவிற்கு இல்லை.
மதுரையில் கடந்த 3 வாரமாக ‘கரோனா’ தொற்று வேகம் மின்னல் வேகத்தில் அதிகரித்தொடங்கியுள்ளது.
ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து ‘கரோனா’ பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கத்திற்கு மாறியுள்ளது.
இன்று ஒரே நாளில் 204 பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,279 பேராக உயர்ந்தது.
இவர்களில் இதுவரை 448 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
820 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுகின்றனர்.
நோயாளிகள் குணமடைவது ஒரு புறம் அதிகரித்தாலும் மற்றொரு புறம் பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்தொடங்கியுள்ளது.
மதுரையில் சென்னையை போல் மருத்துவகட்டமைப்பு வசதிகள் இல்லை.
ஏற்கெனவே போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் இல்லாமல் மதுரை அரசு மருத்துவமனை திணறிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதனால், மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
‘கரோனா’ வார்டு பணியை பொறுத்தவரையில் ஒரு முறை மருத்துவர், செவிலியர் பணிக்கு வந்தால் அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள காலஅவகாசம் வழங்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களால் நோய் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து இல்லாமல் இருந்தால் தனிமைப்படுத்திக் கொண்டு அடுத்த முறை சுழற்சி முறையில் ‘கரோனா’ வார்டு பணிக்கு வர முடியும்.
தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவக்குழுவினரால் நோயாளிகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
நோயாளிகளுக்கு சரியான நேரத்திற்கு உடனுக்கடன் காலை, மதியம், இரவு வேளைக்கு சாப்பாடு கூட வழங்க முடியவில்லை.
உணவு தாமதமானால் நோயாளிகள் ‘கரோனா’ வார்டில் பணிக்கு செல்லும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்து பிரச்சனை செய்கின்றனர்.
அதனால், ‘கரோனா’ வார்டில் மருத்துவக்குழுவினருக்கும், நோயாளிகளுக்கும் இடையே இனக்கமான சூழ்நிலை இல்லை. தற்போது நோயாளிகள் சென்னையை போல் உயரத்தொடங்கியுள்ளதால் மருத்துவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மதுரையில் தற்போது நோய்த் தொற்று அதிகரிப்பு சில காரணங்கள் கூறப்படுகின்றன.
மதுரை பரவை காய்கறி மார்க்கெட்டிற்கு வடமாநிலங்களில் இருந்து வந்த லாரி டிரைவர்கள் மூலம் அங்குள்ள வியாபாரிகளுக்கு ‘கரோனா’ தொற்று பரவியது.
அவர்கள் மூலம் பொதுமக்களுக்கும் பெரியளவில் பரவியதாகக் கூறப்படுகிறது.
காய்கறிக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை முறையான சோதனைக்குட்படுத்தி சுகாதாரத்துறை அனுமதித்திருக்க வேண்டும்.
அதுபோல், சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலமூம் பரவியதால் மதுரையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களையும் சுகாதாரத்துறை சரியாக கையாளமால் கோட்டை விட்டுவிட்டது.
அதனால், ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை அதன்பிறகு இரட்டை இலக்கத்திற்கு மாறி தற்போது மூன்று இலக்கத்திற்கு வந்துள்ளது.
இதேவிகித்தில் அதிகரித்தால் மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது.