வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு மட்டுமே வருமானவரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக, சில புதிய அறிவிப்புகள் வெளியாகின.

என்ஆர்ஐ என்பதற்கான புதிய வரையறையும், மத்திய அரசு வெளியிட்டது.

ஒருவர் 182 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தால், அவர் வெளிநாட்டு வாழ் இந்தியராகக் கருதப்படுவார் என்கிற நடைமுறை மாற்றப்பட்டது.

குறைந்தபட்சம் 240 நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தால் தான், அவர் வெளிநாட்டு வாழ் இந்தியர் எனக் கருதப்படுவார், என்று மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகளில் வருமான வரி செலுத்தாத, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும், என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவ்வாறு வரி செலுத்துபவர்களின் வருமானம் அனைத்திற்கும், இந்தியாவில் வருமானவரி விதிக்கப்படும் என புரிந்துகொள்ளப்பட்டு, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம்,  என்.ஆர்.ஐ ஒருவருக்கு, இந்தியாவில் வருமான வரி விதிக்கும்போது, அவர் இந்தியாவில் ஈட்டும் வருமானத்திற்குத்தான் , வரி விதிக்கப்படும் என்றும், அவரது வெளிநாட்டு வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே