பிகில் பட விவகாரம் தொடர்பாக சென்னை நீலாங்கரை, சாலிகிராமத்திலுள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம், அன்பு செழியன் தொடர்புள்ள 35 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏஜிஎஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் தொழிலை மேற்கொண்டு வருகின்றது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை இந்த நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் அந்நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலை பிள்ளை தெருவில் இருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், வில்லிவாக்கம், தியாகராயநகர், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தியாகராய நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இதற்காக அன்புசெழியன் பைனான்ஸ் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளம் பெற்றது உள்ளிட்டவற்றில் வரி ஏய்ப்பு நிகழ்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலேயே விஜயிடம் விசாரணை நடத்தி முயற்சி செய்தனர்.

அங்கு விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாததால், வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று விஜயிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

பின்னர், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்யவுள்ளனர்.

இதற்கிடையில், சென்னை சாலிகிராமம், நீலாங்கரையிலுள்ள விஜயின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே