தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இளைஞர்களிடம் அதிகம் உள்ளது

தமிழ்நாட்டில் தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 7,000 பேர் இவர்களில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இளைஞர்களிடம் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளில் 51% 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 7,000 பேர் இவர்களில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

கடந்த ஆண்டு இவர்கள் வெளியில் வராமல் பாதிப்பு ஏற்படாத காரணத்தினால் இந்த முறை  அதிக பாதிப்பு ஏற்படலாம் என்றும் , ஊரடங்கு இல்லாத சூழலில் தொடர்ந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதால் இந்த வயது பிரிவினரில் பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் அதிக அளவில் தெரிகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட்ட 10,787 மாதிரிகள் ஆராய்ந்து பார்த்ததில் 771 மாதிரிகளில் பல்வேறு உருமாறிய கொரோனாக்கள் கண்டறியப்பட்டன.

இதில் 736 மாதிரிகள் பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸாகும். இதில் தமிழ்நாட்டில் பிரிட்டன் உருமாறிய கொரோனா 14 மாதிரிகளிலும் தென் ஆப்பரிக்கா உருமாறிய கொரோனா ஒரு மாதிரியிலும் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து உருமாறிய கொரோனா இருக்கிறதா என்பதை தொடர்ந்து  கண்டறிய மாதிரிகள் அனுப்பப்படுவதில்லை. உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் இருக்கும் பொழுது தமிழ்நாட்டிலும் அதனுடைய தாக்கம் இருக்கலாம் அதன் காரணமாக நோய் பரவல் அதிகமாக இருக்கலாம் என்று தொற்று நோய் நிபுணர் சுப்பிரமணியன் சுவாமி நாதன் கூறுகிறார்.

இளைஞர்கள் அதிக அளவில் கூட்டம் கூடி பழகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த பிரிவினரில் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.  45 வயதுக்கு உட்பட்டவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததும் மற்றொரு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

பொதுவாக இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவது காணப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா நோயாளிகள் மத்தியில் நடத்திய ஆய்வில் இராண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் இள வயதினர் என்பதும் அவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்தது. அதே நிலை தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானி கிருஷ்ணசாமி கூறுகிறார்.

45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்காத நிலையில் தொடர்ந்து முக கவசம் அணிவதே கொரோனாவிலிருந்து நம்மையும் நம் வீட்டு முதியவர்களையும் கொரோனாவிலிருந்து காப்பாற்ற சிறந்த வழி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே