பெங்களூருவில் கடந்த 28 நாட்களில் 10 வயதுக்குட்பட்ட 470 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிப்பு

பெங்களூருவில் கடந்த 1-ம் தேதியிலிருந்து 26-ம் தேதிவரை 10 வயதுக்குட்பட்ட 470 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுவரை மொத்தம் 244 சிறுவர்கள், 228 சிறுமிகள் கடந்த 26 நாட்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக 46 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பின் தொற்றுநோய்ப் பிரிவு பேராசிரியரும், மாநில கரோனா தடுப்பு தொழில்நுட்பக் குழுவில் உறுப்பினராக இருக்கும் கிரிதரா ஆர்.பாலு கூறியதாவது:

“கடந்த காலத்தைப் போல் அல்லாமல் குழந்தைகள் வெளிப்புற நடவடிக்கைகளான விளையாடுதல், விருந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்லுதல், கூட்டமான இடங்களான ஷாப்பிங் மால், பள்ளிக்கூடம் போன்றவற்றுக்குச் செல்லும்போது கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

ஆனால், லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் அவ்வாறு செல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் வீட்டில் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால்கூட அது வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் எளிதில் பரவுகிறது.

குழந்தைகள் கரோனாவில் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள். அவர்களுக்குத் தொடர்ந்து முகக்கவசம் அணிவிக்கவும் முடியாது. அவர்களைச் சமூக விலகலைக் கடைப்பிடிக்கக் கூறவும் இயலாது.

அதிலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. வீட்டின் அருகே இருக்கும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போதும், பேசும்போதும் யாரேனும் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால், எளிதில் பரவுகிறது.

குறிப்பாகப் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் விளையாடும் குழந்தைகளுக்குத் தொற்று எளிதில் பரவுகிறது. ஆதலால், குழந்தைகளுக்கு இடையே கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காகத்தான் பள்ளிகளை மூடக் கூறியுள்ளோம். தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரியுள்ளோம். எந்தவிதமான தேர்வும் இன்றி அவர்களை பாஸ் செய்யவும் கோரியுள்ளோம். அதுகுறித்து அரசுதான் முடிவு எடுக்கும்”.

இவ்வாறு கிரிதரா ஆர்.பாலு தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே