கைலாசா நாட்டிற்கு வர 3 ஊர்களுக்கு முக்கியத்துவம்! – நித்தியானந்தா

கைலாசா நாட்டில் வணிகம் செய்ய தமிழகத்தின் 3 ஊர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நித்தியானந்தா கூறியுள்ளார்.

அகமதாபாத் போலீசாரால் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று அந்நாட்டின் கரென்சியை அறிமுகம் செய்தார் நித்தியானந்தா.

விரைவில் கைலாசாவுக்கு செல்ல விசா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு நடுவே கைலாசா நாட்டுக்கு செல்ல பல லட்சம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று, மதுரையை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் கைலாசாவில் உணவகம் அளிக்க அனுமதி அளிக்கவேண்டும் என நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்த கடிதத்தில், “தங்களது கைலாசா நாட்டில் எங்களது டெம்பிள் சிட்டி ஹோட்டலை திறப்பதற்கு அனுமதி வேண்டி காத்திருக்கிறேன். இது உலகிலேயே மிகச்சிறந்த உணவை அங்கு வழங்கி கைலாசா நாட்டை மேலும் வளப்படுத்த உதவும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் எவ்வாறு மக்களை ஈர்க்க பக்தர்களை வைத்து புதிய யுக்திகளை கையாள்கிறீர்களோ, அதே போல, நாங்களும் மாஸ்க் பரோட்டா, கரோனா தோசை என பல்வேறு யுக்திகளை கையாள்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று நேரலையில் பேசிய நித்தியானந்தா, “கைலாசா நாட்டு வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

உடம்பில் ஓடும் ரத்தம், உயிரில் இருக்கிற தைரியம் இவை எல்லாம், இந்த மூன்று ஊர் மக்கள் போட்ட பிச்சை” என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே