சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப், விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐஐடியில் ஹியூமானிட்டிஸ் பிரிவில் சேர்ந்தார்.
படிப்பில் டாப்பராக விளங்கியதால் ஐஐடியில் அவருக்கு எளிதாக இடம் கிடைத்தது. இங்கும் அவர் படிப்பில் சிறந்து விளங்கிவந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் விடுதி அறையில், பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம், ஐஐடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக, சென்னை போலீஸ் துணை கமிஷனர் சுதர்சன் கூறியதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டுள்ளது.
மாணவர்கள் விடுதியில் அருகில் இருப்போர், பேராசிரியர்கள் என 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாத்திமா பயன்படுத்திய மொபைல்போன் பரிசோதனைக்காக, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணை சென்றுகொண்டிருக்கிற நிலையில், இதுதொடர்பாக எவ்வித முடிவுக்கும் வந்துவிட முடியாது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாத்திமாவின் பெற்றோர், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு முதல்வர் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலேயே, தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஏற்படுத்திய மனஉளைச்சலினாலேயே, தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பாத்திமாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பாத்திமாவின் மொபைல் போனிலிருந்து கைப்பற்றப்பட்ட பதிவில், தன்னை பேராசிரியர் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக, ஐஐடி வளாகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா நீதி விசாரணை கேட்டு போராட்டம் நடத்தினர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.