டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

லுக்மன் மேரிவாலா வீசிய 2-வது ஓவரில் ராகுல் 1 பவுண்டரி, அகர்வால் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸரைப் பறக்கவிட பஞ்சாப் அதிரடியைத் தொடங்கியது.

அகர்வால் பவுண்டரிகள் விளாச ராகுல் நிதானம் காட்டி ஒத்துழைப்பு தந்தார். இதனால், பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து சிறப்பான அதிரடியை வெளிப்படுத்திய அகர்வால் 25-வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார். 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் குவித்து அதிரடியான முடிவுக்கு அடித்தளம் அமைத்தது.

ககிசோ ரபாடா வீசிய 11-வது ஓவரில் அகர்வால் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களும், ராகுல் 1 சிக்ஸரும் அடிக்க ரன் ரேட் ஓவருக்கு 10-ஐத் தாண்டியது.

இந்த நிலையில் அகர்வால் 69 ரன்களுக்கு மேரிவாலா ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடித்த ராகுலும் 61 ரன்களுக்கு ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

கிறிஸ் வோக்ஸின் ஃப்ரீ ஹிட் பந்தில் வேகத்தில் சிக்ஸரைப் பறக்கவிட்ட கெயில், அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் பறிகொடுத்தார். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையடுத்து, ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரில் தீபக் ஹூடா ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால், அதே ஓவரில் நிகோலஸ் பூரன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வோக்ஸ் வீசிய கடைசி ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் ஷாருக் கான். 3-வது பந்தில் ஒரு பவுண்டரி, 4-வது பந்தில் அட்டகாசமான சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மேலும் அசத்தினார் ஷாருக் கான். ஆனால், கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹூடா 13 பந்துகளில் 22 ரன்களும், ஷாருக் 5 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே