“எனக்கு மிதப்பதுபோல் இருக்கு” – வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..!!

ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ள செய்தியைக் கேட்டவுடன் எனக்குக் கனவுபோல் இருந்தது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரும், தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு நவம்பர் முதல் ஜனவரி வரை 3 மாதங்கள் நீண்ட பயணத்தை இந்திய அணி மேற்கொள்கிறது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிவரும் வருண் சக்ரவர்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதையடுத்து இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

29 வயதாகும் வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட் விரும்பியாக இருந்தாலும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாகவே கிரிக்கெட் பழகியவர்.

ஆனால், விக்கெட் கீப்பர் பணிக்குப் பல போட்டிகள் இருந்ததால், கடந்த 2018-ம் ஆண்டில்தான் சுழற்பந்துவீச்சுக்கு மாறிப் பயிற்சி எடுத்தார். இதுவரை முதல்தரப் போட்டிகளில் 12 டி20 போட்டிகளில் மட்டுமே வருண் சக்ரவர்த்தி விளையாடியுள்ளார்.

இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து வருண் சக்ரவர்த்தி பிசிசிஐ தொலைக்காட்சி அளித்த பேட்டியில், ‘ பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் நேற்று முடிந்தபின் என்னிடம் வந்து சகவீரர்கள் உனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆஸி. தொடருக்கு உன்னைத் தேர்வு செய்துள்ளார்கள் என்று கூறியவுடன் எனக்கு ஏதோ கனவில் இருப்பதைப் போன்று இருந்தது.

எனக்கு இந்திய அணியில் இடமா, எனக்கு இந்திய அணியில் இடமா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

என்னுடைய அடிப்படைக் குறிக்கோள் எந்த அணியில் இடம் பெற்றாலும் சிறப்பாக விளையாடுவது அணியின் வெற்றிக்காகத் தொடர்ந்து பங்களிப்புச் செய்வதாகும். இதே பணியை இந்திய அணிக்கும் நான் செய்வேன் என நம்புகிறேன்.

சமூக ஊடகங்களை நான் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. என்னைத் தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு வேறு வார்த்தைகள் இல்லை.

நான் கடந்த 2018-ம் ஆண்டில்தான் என்னுடைய சுழற்பந்துவீச்சைத் தொடங்கினேன். டிஎன்பிஎல் போட்டிதான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் காயத்தால் இழந்தேன்.

இந்த ஆண்டு மீண்டும் சிறப்பாகச் செயல்படுவேன் என நம்புகிறேன்.

என்னுடன் இருக்கும், என்னைச் சுற்றி இருக்கும் சிலர் அளிக்கும் நம்பிக்கை, ஆதரவு, ஊக்கம் ஆகியவற்றால் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன்.

கடந்த 2015-ம் ஆண்டில் என்னால் போதுமான அளவு சம்பாதிக்க முடியவில்லை.

இதனால் என்னுடைய கட்டிடக்கலைஞர் பணியை உதறிவிட்டுத்தான் கிரிக்கெட்டுக்குள் வந்தேன்.

என்னால் என் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூட சம்பாதிக்க முடியவில்லை.

அதன்பின்புதான் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதால்தான் நான் கிரிக்கெட்டைத் தேர்வு செய்தேன்.

கிரிக்கெட் எனக்குப் பிடிக்கும். அதேபோல, கட்டிடக்கலையும் மிகவும் பிடிக்கும்’ எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே