அவர் என்னிடம் ‘பந்தை நன்றாக உற்று கவனி’ என்றார், அதைத்தான் செய்தேன்
டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆன விராட் கோலி சமீப காலங்களில் சரியாக பேட் செய்யாமல் இருந்தார், டக்குகளை அதிகம் அடித்தார். இதனால் அவரது ஆட்டம் போய்விட்டதோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர், அவருக்குமே அது பெரிய கவலையாக இருந்திருக்க வேண்டும்.
இந்நிலையில் இரண்டு டக்குகளை தொடர்ச்சியாக அடித்த நிலையில் நேற்று இறங்கிய விராட் கோலி கிரிக்கெட்டின் அடிப்படைகளுக்குத் திரும்பி பேட் கால்காப்பு நெருக்கமாக வர மட்டை சரியான கோணத்தில் பந்தின் மேல் இறங்க, கால் நகர்த்தல்கள் பந்துக்கு தக்கவாறுமாற 49 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்து மீண்டும் விரட்டல் மன்னன் என்ற பெயருக்கு ஏற்ப வெற்றி பெறச் செய்தார்.
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி கூறியதாவது:
நான் என்னுடைய ஆட்டத்தில் கிரிக்கெட்டின் அடிப்படைகளுக்குத் திரும்புவதில் கவனம் செலுத்தினேன். வெளியே பல மாறுதல்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அணிக்காக ஆட்டத்தில் பங்களிப்பு செய்வதில் நான் எப்பவுமே பெருமை கொள்பவன்.
எனவே 73 ரன்கள எடுத்ததை விட எனக்கு இதுவே மன நிறைவாக இருந்தது. பந்தின் மேல் கண்ணை வைத்து கவனம் செலுத்தினேன். அணி நிர்வாகமும் என்னிடம் என் பேட்டிங் குறித்து விவாதித்தார்கள், பேசினார்கள்.
என் மனைவி அனுஷ்காவும் என்னுடன் நிறைய பேசி எனக்கு நம்பிக்கை அளித்தார். அதுவும் மன நிறைவாக இருந்தது. குறிப்பாக இந்த ஆட்டத்துக்கு முன்பாக ஏ.பி.டிவில்லியர்ஸிடம் சிறப்பு உரையாடல் மேற்கொண்டேன். பேட்டிங் பற்றி ஆலோசனைகளைப் பெற்றேன்.
அவர் என்னிடம் ‘பந்தை நன்றாக உற்று கவனி’ என்றார், அதைத்தான் செய்தேன்
முதல் போட்டியில் இங்கிலாந்து தாங்கள் உலகின் நம்பர் 1 என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பாக ஆடினர். ஆகவே இந்தப் போட்டியில் தொழில்நேர்த்தியுடன் ஆடி வேலையை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் செய்தோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
நேற்று 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த கோலி அரைசதத்தை சிக்சர் மூலமாகவும் வெற்றிக்கான ஷாட்டை சிக்சர் மூலமாகவும் அடித்து பார்முக்குத் திரும்பியதை அறிவித்தார். நேற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார், ஆனால் ஜோர்டானின் துரதிர்ஷ்டம் கோலியின் அதிர்ஷ்டவசமானது.