சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷண், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாகுர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 165 ரன்கள் என்ற இலக்கை, தொடக்க வீரர் இஷான் கிஷன், கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 18 ஆவது ஓவரிலயே எட்டியது. அதிரடி விளாசல் காட்டிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். ரிஷப் பந்த் தம் பங்கிற்கு 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார்.
49 பந்துகளில் 73 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கடைசி வரை ஆட்டமிழக்காமல், வெற்றிக் களிப்புடன் பெலிவியன் திரும்பினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளதால் தொடர் விறுவிறுப்படைந்துள்ளது.
86 டி20 போட்டிகளில் விளாடியுள்ள கேப்டன் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 1000, 2000 ரன்களை முதல் வீரராக நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் கடந்திருந்தார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில் 99 போட்டிகளில் 2839 ரன்களுடனும், ரோகித் சர்மா 109 போட்டிகளில் 2773 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஐபிஎல் டி20 போட்டிகளிலும் விராட் கோலியே ரன் குவிப்பில் முன்னிலையில் உள்ளார். 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5878 ரன்களை குவித்துள்ளார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று விதமான போட்டிகளிலும் பேட்டிங் சராசரியில் 50 ரன்களை கடந்தார் விராட் கோலி.