ஜெர்மனியில் கரோனா 3-ம் அலை ஆபத்து: ஊரடங்கு ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

ஜெர்மனியில் கரோனா 3-ம் அலை பரவும் ஆபத்து இருப்பதால் ஊரடங்கு ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்த ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. ஜெர்மனியில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தபோதும் பின்னர் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஜெர்மனியில்2,659,516, அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,664 பேர் பலியாகி உள்ளனர்

சீனாவைத் தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஜெர்மனியில் கரோனா 3-ம் அலை தொடங்க இருப்பதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வந்தது. இது தொடர்பான மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கை மேலும் நீட்டிக்க ஜெர்மனி அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெர்மனியில் கரோனா 3-ம் அலை தொடங்கும் ஆபத்து இருப்பதால் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 18-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் திருநாள் விடுமுறை காலத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், 3-ம் அலையை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே