ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ரமலான் நோன்பு இந்த மாதத்திலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான்.
இத்தகைய நோன்புக் கஞ்சி, நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும்.
மேலும் இந்த நோன்பு கஞ்சியானது மசூதிகளில் அதிக அளவில் செய்யப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்படும். குறிப்பாக நோன்பு கஞ்சியானது மிகவும் சுவையானது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கான அரிசியை பள்ளிவாசல் நிர்வாகங்கள் மூலம் வீடுகளுக்கே விநியோகம் செய்ய அரசு தலைமை காஜியுடன் தலைமைச் செயலாளர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது
இத்தகைய நோன்பு கஞ்சியானது பலருக்கு செய்யத் தெரியாது.
அத்தகையவர்களுக்காக எளிமையான முறையில் எப்படி நோன்பு கஞ்சி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (முக்கோணமாக நறுக்கியது)
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
தேங்காய் பால் – 1 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின் மிக்ஸியில் சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
- தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், மல்லி, புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 10-15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
- கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி, நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கி, தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றினால், சுவையான நோன்பு கஞ்சி ரெடி!!!