ரேஷன் அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண நிதியை பெறுவது எப்படி.?

கொரோனா நிவாரணமாக வழங்கப்படவுள்ள 1000 ரூபாயை எப்படி பெறுவது என்ற வழிமுறைகளை கூறியுள்ளது தமிழக அரசு.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலும் இன்றில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி உத்தரவால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

மேலும், ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது உணவு வழங்கல் துறை.

அதில், தலா ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்காக, 2,014 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்க 173 கோடி ரூபாய் என மொத்தம் 2,187 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சரி, இந்த 1000 ரூபாய் மற்றும் இலவச பொருட்களை எப்படி வாங்குவது?

மக்கள் கூட்டமாக கூட கூடாது என்பதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரேஷன் கடைகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் குவிவதை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன் பெற்ற வாடிக்கையாளர்கள் ரேஷன் கடைக்கு சென்று 1000 ரூபாய் பணம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே