அதிகரிக்கும் கரோனா தொற்றால் உ.பி.யில் மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

உ.பி.யில் கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் இரவு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், அன்றைய தினம் மாலை வரை மட்டும் 543 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதற்கும் இதில் ஒருவர் இறந்ததற்கும் கவலை தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 28-ல் வரவிருக்கும் ஹோலி பண்டிகை, தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிக கவனமுடன் இருக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். கரோனா பரவலுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 8-ம் வகுப்பு வரை மீண்டும் மூடவும் முதல்வர் உத்தரவிட்டார்.

மாநிலத்தின் தெய்வீக நகரமான மதுராவில் ஹோலி கொண்டாட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஹோலி கொண்டாட்டங்கள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணன் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவில் பல்வேறு கோயில்களில் அன்றாடம் சிறப்பு பூஜைகளும் கொண்டாட்டங்களும் நடந்து வருகின்றன. இதற்காக, அக்கோயில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நெரிசலுடன் கூடுவதும் அதிகரித்துள்ளது.

பிருந்தாவனில் உள்ள பாங்கேபிஹாரி கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு ‘லட்டு ஹோலி’ கொண்டாடப்பட்டது. இதில் பூஜைக்கு பிறகு பண்டிதர்களால் வீசி எறியப்படும் லட்டு பிரசாதத்தை பிடிக்க முயன்ற பக்தர்கள்நெரிசலில் சிக்கினர். இக்கூட்டங்களில் சமூக இடைவெளி சிறிதும் இல்லாமல் இருப்பதுடன் எவரும் முகக்கவசமும் அணியாத சூழலும்உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே