ஒகேனக்கல் குடிநீர் நீரேற்று நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீரில் குளோரைடு அதிகமாக இருந்ததால் அத்தண்ணீரை குடித்த மக்களுக்கு பற்கள் மற்றும் எலும்புகள் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினின் கனவு திட்டமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் 2008ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது கொண்டுவரப்பட்டது. அச்சமயம் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் இத்திட்டத்தை கொண்டு வந்தார். 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி கலைஞர் கருணாநிதி அவர்களால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2011 வரை சுமார் 80 சதவீத பணிகள் நிறைவுற்றது. அதனை தொடர்ந்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2013ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் காணொலி காட்சி மூலமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமானது நிறைவேற்றப்பட்டது.
நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 30 லிட்டர் என்ற வகையில் 143 மில்லியன் லிட்டர் தண்ணீரானது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் காவிரி கரையோரமாக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நீரேற்று நிலையம் அருகே யானைப்பள்ளம் என்ற இடத்தில் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, காவிரி ஆற்று நீர் நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருந்த போது அவரிடம் ஏராளமான மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஒகேனக்கல் நீரேற்று நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக யானைப்பள்ளம் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.