ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் நடைபெறுவதை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் – டிடிவி தினகரன் அறிக்கை..!!

ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என, டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஏப். 26) வெளியிட்ட அறிக்கை:

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர் நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், தமிழகத்தில் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல், இங்குள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய அரசும், எதிர்க்கட்சியான திமுக-வும் கடந்த காலங்களில் இரட்டை வேடம் போட்டதால், இப்போதும் அவர்களை நம்புவதற்கு தூத்துக்குடி மக்கள் தயாராக இல்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளை தந்திரமாக அதன் உரிமையாளர்கள் செய்துவிடுவார்களோ என்ற பயம் தூத்துக்குடி மக்களிடம் இருக்கிறது.

அவர்களின் இந்த உணர்வினைப் புரிந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி சென்னை உயர் நீதிமன்றமும் கண்காணித்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், தற்போதுள்ள சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை நிறுத்திட வேண்டும்.

தமிழகத்தின் தேவையே இன்னும் பூர்த்தியாகாத நிலையில், இங்கே உற்பத்தியாகும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், வாய்ப்புள்ள மற்ற ஆலைகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி அரசு மேற்கொள்ளவேண்டும்.

இதுமட்டுமின்றி, தடுப்பூசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இலவசமாக தடுப்பூசிகளைப் போடுவது ஆகியவற்றையும் மத்திய, மாநில அரசுகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே