பாத்திமா மன உளைச்சலில் இருந்ததாக தோழி வாக்குமூலம்

சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது தோழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீம் சென்னை ஐஐடியில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் படித்து வந்தார்.

கடந்த 9-ம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தூக்கில் தொங்கியபடி இவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது செல்போன் குறுஞ்செய்தியில் மத ரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவி குறிப்பிட்டிருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடமும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்ததை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

மாணவி தற்கொலை விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் வெளியூரில் இருந்து காலை சென்னை திரும்பினார்.

அவரிடம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வமூர்த்தி, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 25 பேரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், கூடுதல் துணை ஆணையர் மெகலினா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார், மாணவி தனது தற்கொலை குறித்து செல்போனில் அனுப்பிய குறுஞ்செய்தியின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, விடைத்தாள் மதிப்பெண் தொடர்பாக பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதில் 18 மதிப்பெண்களுக்கு பதிலாக 13 மதிப்பெண் அளித்ததிருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் விடைத்தாளை ஆய்வு செய்ததில் பேராசிரியர் அளித்த மதிப்பெண் சரியாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தவறான தகவலை ஆசிரியருக்கு மெயிலில் அனுப்பிவிட்டேன் என பாத்திமா மன உளைச்சலில் இருந்தாக அவரின் தோழி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

பாத்திமாவின் செல்போனை சைபர் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை அளிக்கவுள்ளனர்.

அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்களுக்கு எதிராக வேறு புதிய ஆதாரங்கள் இருக்கிறதா என்பது தெரியவரும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே