“சிகிச்சைக்கு உதவுங்கள்” – நடிகர் தவசி வேண்டுகோள்..; நடிகர் சூரி முன்வந்து உதவி..!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் தவசி, தனது வாழ்வாதாரத்திற்காக நிதி உதவி கோரியிருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தவசி. அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால்,நடிகர் தவசி அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து விட்டார்.

இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வர தனக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

இதுகுறித்து டாக்டர்.சரவணன் கூறியதாவது, “திரு.தவசி அவர்கள் 11.11.2020 அன்று உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், எங்களது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

140-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், எங்களது கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் “கண்ணே கலைமானே” திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்தப் படப்பிடிப்பு தளத்தில்தான் எனக்கு இவர் அறிமுகமானார்.

இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால், அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால், வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தார்க்கு பேருதவியாக இருக்கும்” என்றார் டாக்டர் சரவணன்.

இதற்கிடையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தவசியுடன் நடித்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை டேக் செய்து உதவி கோரி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக நடிகர் தவசிக்கு முதல் கட்டமாக ரூ. 20,000 நிதியுதவி; மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தவசி மற்றும் உடனிருக்கும் உதவியாளருக்கு 3 வேளையும் உணவு வழங்கவும்; நடிகர் தவசிக்கு தேவைப்படும் அடுத்தடுத்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே