பிரட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300ஐ நெருங்குகிறது.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இணையதளத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிகளைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தைகள் நேற்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்தன.

2008ம் ஆண்டை விட தற்போதுதான் பெருமளவு சரிவு ஏற்பட்டதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இத்தாலிக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்துள்ளன.

அந்நாட்டுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.

இதேபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மற்றும் போர்ச்சுக்கல் அரசும் இத்தாலிக்கான தனது விமானங்களின் சேவையை முற்றிலும் நிறுத்தி உள்ளன. 

கொரோனா பாதிப்பால் வாடிகனில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கத்திற்கு லெபனானில் முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இதேபோல் துருக்கியில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரியசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா தொற்றியது எப்படி என விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று இருப்பதையடுத்து டோரியஸ் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தல் உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என ஐ நா சபையின் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

வைரசின் தாக்குதலுக்குள்ளான நாடுகளில் சுற்றுலா, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி போன்ற அம்சங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் உலகளாவிய வர்த்தகம் மந்த நிலையை அடைந்துள்ளது.

இதனால் உலக பொருளாதாரத்தில் இந்திய மதிப்பில் 140 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கணித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே