#HappyBirthdayDhoni : தோனிக்கு இன்று 39ஆவது பிறந்தநாள்

இந்தியாவிற்காக மூன்று விதமான கிரிக்கெட் உலக கோப்பையையும் வென்ற பெருமையுடைய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று (ஜூலை 7) பிறந்தநாள்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி போன்ற முன்னணி வீரர்கள் இருந்தும் 2007ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணி மீது விமர்சனங்கள் கொட்டியது.

அவ்வளவு வலுவான அணி, 2வது சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல், அப்போது கத்துக்குட்டி அணியாக இருந்த வங்கதேசத்திடம் கூட தோல்வியை தழுவியது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் கொந்தளிக்க செய்தது.

தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் எழுந்தன.

உலக கோப்பை தோல்வியால் பல வீரர்கள் எதிர்காலம் குறித்து யோசிக்க தொடங்கினர். கேப்டன் பொறுப்பும் காலியானது. அடுத்த கேப்டன் பொறுப்பை ஏற்க சச்சின், சேவாக் என யாரும் தயாராக இல்லாததால், அனுபவ வீரர் யுவராஜ் சிங்கிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியப்படும் விதமாக தோனியை தேடி வந்தது கேப்டன் பதவி.

50 ஓவர் உலக கோப்பையில் படுதோல்வி அடைந்த அதே 2007ம் ஆண்டு தான் முதலாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பையும் நடந்தது.

பல அனுபவமில்லாத வீரர்களை கொண்ட அணியும், புதிய கேப்டன் பொறுப்பும் தோனிக்கு ஒருவித நெருக்கடியை உண்டாக்கும் என எண்ணப்பட்டது.

ஆனால், அந்த அணியை வைத்து நேர்த்தியாக வழிநடத்தி முதலாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பை பைனலில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து தன் திறமையான தலைமை பண்பின் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.

அப்போது ஆரம்பமான இந்திய கிரிக்கெட்டின் ஏற்றம் தொடர்ந்தது. தொடர்ந்து சாதித்து வந்த தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலக கோப்பையையும் எதிர்கொண்டது.

அதற்கு முந்தைய உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியை, இந்த உலக கோப்பையில் பைனல் வரை கொண்டு சென்றது மட்டுமல்லாமல், பைனலில் தனது அபாரமான ஆட்டத்தால் சிக்சர் அடித்து 50 ஓவர் உலக கோப்பையையும் வென்று சாதித்தார்.

அடுத்ததாக 2013ல் நடந்த மினி உலக கோப்பை எனப்படும் ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.

2010 மற்றும் 2016 ஆகிய இருமுறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில் தான்.

அதுமட்டுமல்லாமல், உலக அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் திறமை வெளிப்பட்டது.

2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.இவ்வளவு சாதனைகளை புரிந்தாலும், ஒருநாளும் அலட்டிக்கொள்ளாமல் வெற்றி, தோல்விகளை இயல்பாக எடுத்துக்கொள்வதால் ‘கேப்டன் கூல்’ எனவும் ரசிகர்களால் அழைக்கப்படும் இச்சாதனை மனிதனுக்கு இன்று 39வது பிறந்தநாள்.

டெஸ்டில் மட்டுமே ஓய்வு பெற்ற அவர், ஒருநாள், டுவென்டி-20 போட்டிகளிலும் ஓய்வு பெறுவார் என பலர் கூறினாலும், தன்னுடைய திறமையை வெளிக்காட்ட நினைத்த நடப்பாண்டு ஐபிஎல் தொடரும் ரத்து செய்யப்பட்டன, டுவென்டி-20 உலக கோப்பையும் தள்ளிப்போகும் நிலையில் உள்ளது.

தோனியின் ஆட்டம் குறித்தும், வயது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்கும், அவருடைய சாதனைகளும் நிச்சயம் பேசும். அந்த சாதனைகள் என்றும் மாறாதது.

39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அவருக்கு, கிரிக்கெட் ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1682 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே