வனப்பகுதிகள் மிக்க குறுகிய பாதைகளில் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்ளுக்கு கொண்டுசெல்ல பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ இன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து உருவாக்கிய இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு அவசரகால தேவைகளில் பயன்படும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பதட்டமான பகுதிகளில் குறிப்பாக மாவோயிஸ்டு நடமாட்டம் மிக்க பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகளின்போது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் குறுகிய பாதைகளில் வேகமாக செல்ல வேண்டிய அவசியத்தை பலமுறை சிஆர்பிஎப் உணர்ந்துள்ளது.

மருத்துவ வசதிகள் சரியான நேரத்தில் அடைய முடியாத நிகழ்வுகளும், மருத்துவ உதவிகளில் தாமதம் ஏற்பட்டதும் நோயாளிகளின் நிலைமையை மிகவும் சிக்கலானதாக ஆக்கியுள்ளன.

அதன் விளைவாக இந்த பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்குகள் துப்பாக்கிச் சண்டையின்போது ஏதேனும் சிஆர்பிஎஃப் ஜவான்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவசர உதவி வழங்கும் .

இந்த பைக்குகள் பீஜப்பூர், சுக்மா, டான்டேவாடா போன்ற பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் பெரிய வாகனங்கள் அல்லது ஆம்புலன்ஸ்களை வனப்பகுதிகளில் கொண்டு செல்வது கடினம்.

இவ்வாறு சிஆர்பிஎப் அதிகாரி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே