ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் ரூ.500க்கான மளிகை தொகுப்பு- தமிழக அரசு

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ₹500 மதிப்புள்ள ரேஷன் பை பொருட்களை அனைவருக்கும் கிடைக்கும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பையை ₹500க்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.

இந்த பொருட்களை ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், ரேஷன் கார்டுகள் இல்லாத லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை கேட்காமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டுறவு துறை பதிவாளர் கோவிந்தராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ₹500 விலையில் 19 பொருட்கள் அடங்கிய பை ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மட்டும் விற்பனை செய்ய முதலில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு அம்மா மினி கூட்டுறவு கடைகள், மொபைல் காய்கறி கடைகள், சுய சேவை யூனிட்டுகள் மூலம் இந்த அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரேசன் பொருட்களை வாங்கும்போது இதை வாங்கலாம். ஆனால் கட்டாயமில்லை. வீட்டு வாசலுக்கே இந்த பொருட்கள் தேடிவரும்.

அது மட்டுமல்லாமல் ₹1000 மதிப்புள்ள பொருட்களின் தொகுப்பும் விற்பனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே