அஜீரண கோளாறை உடனே விரட்டி அடிக்கும் பாட்டி கால அன்னப்பொடி, தயாரிப்பும் பயன்பாடும்!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை செரிமானக்கோளாறும், மலச்சிக்கலும். ஆரம்பகட்டத்தில் உண்டாகும் செரிமானக்கோளாறை அலட்சியம் செய்யும் போது, அடுத்த பிரச்சனையாய் மந்தமும், வயிறு கோளாறும், மலச்சிக்கலும் வருகிறது.

உண்ணும் உணவு ஜீரணிக்காமல் இருப்பதால் உண்டாகும் கோளாறை தடுத்து நிறுத்த உணவே உதவும். இது பாதுகாப்பான பக்கவிளைவில்லாத முன்னோர்கள் வைத்தியம். இதை செரிமானக்கோளாறு வந்த பிறகு அவர்கள் எடுத்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் ஜீரண உறுப்புகள் பாதுகாப்பாக இருக்க உணவில் இதையும் சேர்த்துகொண்டவர்கள் நம் முன்னோர்கள். ருசியும் ஜோராகவே இருக்கும்.அன்னப்பொடி என்று அழைக்கப்படும் இந்த ருசியான பொடியின் தயாரிப்பு குறித்தும் பயன்கள் குறித்தும் தெரிந்துகொள்வோம்.
​அன்னப்பொடி தயாரிப்பு.
தேவையானவை

சுக்கு -50 கிராம்

மிளகு – 30 கிராம்

திப்பிலி – 30 கிராம்

சீரகம் – 50 கிராம்

கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி அளவு,

ஏலக்காய் – 5,

பெருங்காயம் – 1 டீஸ்பூன் (புளியங்கொட்டை அளவு கட்டியாக இருந்தால்)

கல் உப்பு- 3 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றாற் போன்று.

சுக்கை மஞ்சள் தடவி சுட்டு அதன் தோலை தனியாக எடுக்கவும்.சிறு துண்டுகளாக இடித்து வைக்கவும். வெறும் வாணலியில் மிளகு, திப்பிலி, சீரகம், சுக்கு அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். கறிவேப்பிலையை நிழலில் உலர்த்து அதையும் வாணலியில் சூடேறும் வரை வறுத்து, கல் உப்பு, ஏலக்காய் ,பெருங்காயத்தையும் வறுத்து அனைத்தையும் தட்டில் பரத்தி ஆறவிடவும். இவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் இட்டு மைய அரைக்கவும்.
இந்த பொடியை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இந்த பொடியை பயன்படுத்தலாம்.

​எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்
செரிமானக்கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம். மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு. சேர்த்து தாளித்து இந்த பொடியை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு உதிரான சாதத்தை சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.

ஒரு வயது குழந்தைகளுக்கு நேரிடையாக இது போல் கொடுக்காமல் பருப்பு சாதத்தில் சிட்டிகை பொடி கலந்து வாரம் இரண்டு முறை கொடுக்கலாம். காரக்குழம்பு, வத்தகுழம்பு செய்யும் போது அதில் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து இறக்கலாம். உளுந்தங்களி, வெந்தயக்களி செய்யும் போதும் அதில் சேர்க்கலாம். பாலில் கலந்தும் குடிக்கலாம்.

தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் போதுமானது. செரிமானக்கோளாறு இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும்.

​செரிமானபிரச்சனைக்கு தீர்வு
சுக்கு செரிமானத்துக்கு மட்டும் தீர்வு அல்ல. கடுமையான சளியை குணப்படுத்தும். ஒற்றை தலைவலிக்கு சுக்கை பற்று போட்டால் தலைவலி பட்டென்று பறக்கும். சுக்கு வயிற்று கோளாறுகள் வாயுத்தொல்லையை நீக்கி செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும்.

மிளகு இரும்பு, கால்சியம். நியாசிம், தயமின் ரைபோஃப்ளேவின் சத்துக்களை கொண்டிருக்கிறது. இது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை முறிக்கும். செரிமானக்கோளாறு உண்டாக்கும் மந்தத்தன்மையை போக்கும். மிளகு சேர்த்த அன்னப்பொடி உடனடி தீர்வாக செயல்பட மிளகும் ஒரு காரணம்.

அஜீரணக்கோளாறு பாடாய்படுத்தும் போது சீரகம் கலந்த நீரை வெறும் வயிற்றில் குடித்துவந்தாலே ஜீரண மண்டலம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். சீரகம் சுவாச மண்டலத்துக்கு நன்மை பயக்ககூடியது. திப்பிலி காரத்தன்மையும் உஷ்ணத்தையும் கொண்டது. கப நோய்களை விரட்டி அடிக்கும் குணம் கொண்டவை. உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இவை உதவுகிறது.

குறிப்பு
சுக்கை தோல் நீக்காமல் பயன்படுத்த கூடாது. குழந்தைகளுக்கு இந்த பொடியை கொடுப்பதால் அவசியம் தோல் நீக்கி பயன்படுத்த வேண்டும். திப்பிலியை பச்சையாக பயன்படுத்தினால் அவை கபத்தை உண்டாக்கும். அதனால் நன்றாக உலர்த்திய பிறகு இதை பயன்படுத்த வேண்டும். காரத்தன்மை நிறைந்தது என்பதால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் அன்னப்பொடி தயாரிகும் போது சற்று அளவில் குறைத்து பயன்படுத்தலாம்.
காய்ச்சல் காலங்களில் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் பொடியை கலக்கி தேன் சேர்த்து இளஞ்சூட்டில் பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். குறிப்பாக சளி, இருமல் காய்ச்சலுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும். செரிமானக்கோளாறு வராமலே போகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே