7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் : அமைச்சர் சி.வி.சண்முகம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பூஜ்ஜியத்திற்கு நிகரானது என, இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விழுப்புரத்தில் இன்று (பிப்.22) அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், எழுவர் விடுதலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியதாவது:

மத்திய அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வரம்பை மீறிப் பேசி இருக்கிறார். 

அவர் பேசியது அவரின் தகுதிக்குக் குறைவானது. இது வரம்பு மீறிய செயல்.

அவர் 2 விஷயங்களைக் குழப்பியுள்ளார்.

மத்திய அரசின் வழக்கில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்ய இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், கருணை மனு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது என்றால், பிரிவு 161-ன்படி ஆளுநர் முடிவெடுப்பதில் தடையேதும் இல்லை என்று சொன்னதும், தமிழக அரசு அமைச்சரவையின் முடிவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் கருத்தை ஆளுநர் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை.

முழுக்க முழுக்க மாநில அரசின் தீர்மானத்தின்படி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.

மத்திய அரசின் வழக்கறிஞர் தன் தகுதிக்குக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

மாநில அரசின் உரிமையைக் கேள்வி கேட்க அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

பிரிவு 161-ன் படி விடுதலை செய்ய வேண்டும் என்றால் முழு அதிகாரம் படைத்தவர் ஆளுநர்.

ஆளுநருக்குக் காலக்கெடு குறிப்பிடப்படவில்லை.

ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே