அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது..!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9ம் வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் முதல்கட்டமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது. மேலும் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான பிற வகுப்பு மாணவர் சேர்க்கையும் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

கூட்டம் சேர்வதை தவிர்க்க காலையில் 20 பேர், பிற்பகலில் 20 பேர் என மாணவர்களை அழைத்து மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அழைக்காமல் தொலைபேசி மூலம் சேர்க்கை நடைபெறும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11ம் வகுப்புக்கு வரும் 24ம் தேதி சேர்க்கை நடைபெறவுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே