பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அரசு விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி நாளை 10.30 மணிக்கு சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்கிறார் மோடி.

அங்கிருந்து கார் மூலமாக செண்ட்ரல் அருகே இருக்கும் நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு செல்கிறார்.

அங்கு, வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்தினை தொடங்கி வைக்கிறார்.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையேயான நான்காவது புதிய பாதை, விழுப்புரம்- கடலூர் – மயிலாடுதுரை- தஞ்சாவூர், மயிலாடுதுரை -திருவாரூர் மின்மயமான ரயில் பாதைகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதைத்தொடர்ந்து அரசு விழாவாக நடைபெறும் இதே நிகழ்ச்சியில் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜீன் மார்க் 2 என்ற புதிய வகை பீரங்கியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விவசாய போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு கருப்பு தினம் என்று கூறி நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே