பிரதமருக்கு எதிராக சமூகவலைத் தளங்களில் ட்ரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின், பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, அவரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இதன் பிறகு, நாங்குநேரி தேர்தல் பணிக்காக சென்னையில் இருந்து புறப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழி மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார் என்றும், ஐ.நா. மாமன்றத்தில் தமிழை மேற்கோள் காட்டி உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் “GO BACK MODI” என ட்ரென்ட் செய்வது திட்டமிட்ட செயல் எனவும், அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆவதை வைத்து பிரதமர் அல்லது முதலமைச்சரை எடை போட்டு விட முடியாது என்றும், வாக்களிக்கப் போவது மக்கள் தான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.