நிர்வாகிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவுறுத்தல்..!!

”தி.மு.க கூட்டணியில் குறைந்த அளவே இடங்கள் கிடைக்கும். அதைப்பற்றி ம.தி.மு.கவினர் கவலைப்பட வேண்டாம், யார் எது சொன்னாலும் கண்டுகொள்ளவேண்டாம். இந்த தேர்தலில் வேறு வழியில்லை” என்று வைகோ மதுரையில் நடந்த தேர்தல் நிதியளிப்பு விழாவில் பேசியுள்ளது ம.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதியளிப்பு விழாவில்
நிதியளிப்பு விழாவில்

தொடர்ந்து வைகோ பேசும்போது, ”நான் தற்போது பூரண நலத்துடன் உள்ளேன். தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எல்லோரும் சொன்னபோது நிதி கிடைக்குமா என சந்தேகப்பட்டேன்.

தமிழகத்திலேயே தேர்தல் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி நாம்தான். மற்ற கட்சிகளில் நிதி குவிந்து கிடக்கிறது.

மக்களுக்கு நம்மிடம் காசு இல்லையென்பது தெரியும். அதேநேரம், மாசற்றவர்கள், நாட்டுக்காக உழைக்கிறார்கள் என்பதால் நீங்கள் கேட்டால் கொடுக்கிறார்கள்.

திராவிடத்தை காக்க தி.மு.க-வுடன் இணைந்து துணையாக இருக்கிறோம். ம.தி.மு.கவினர் யாருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் என்ற எதிர்பார்ப்புகள் இல்லை. அதேநேரம் தேர்தலில் தோல்விகள் ஏற்படும்போது அதிகம் வேதனைப்படுவது நான்தான்.

தி.மு.க கூட்டணியில் குறைந்த அளவே இடங்கள் கிடைக்கும். அதைப்பற்றி ம.தி.மு.கவினர் கவலைப்பட வேண்டாம், யார் எது சொன்னாலும் கண்டுகொள்ளவேண்டாம். இந்த தேர்தலில் வேறு வழியில்லை. ம.தி.மு.க-வினர் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வைகோ செய்தியாளர் சந்திப்பு
வைகோ செய்தியாளர் சந்திப்பு

சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து இருக்கிறேன். சில முக்கியமான முடிவுகள் எடுக்கவும் தீர்மானித்து இருக்கிறேன்.

சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வந்து கட்சி புத்துணர்வு பெறும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவேன்.

வருகின்ற தேர்தலில் தொகுதிக்கு 20 கோடி வரை செலவு செய்ய மற்ற கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால், நம்மிடம் பணம் இல்லை.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாடுபடுகின்ற உங்களைப் போன்ற தொண்டர்கள் எந்த இயக்கத்திற்கும் வாய்க்க மாட்டார்கள்.

ஏழு பேர் விடுதலை பற்றி இன்றைக்கு எல்லோரும் பேசுகிறார்கள். அவர்களுடைய விடுதலைக்காக, 78 லட்ச ரூபாய் செலவு செய்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

இப்போது போல அன்று நீங்கள் திரட்டிக்கொடுத்த நிதியை செலவிட்டுத்தான் தூக்குக்கயிறில் இருந்து அவர்களைக் காப்பாற்றி இருக்கிறோம்.

அதன்பிறகு, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் நானும் வழக்கறிஞர் தேவதாஸும் பலமுறை டெல்லி சென்று விசாரணையில் பங்கேற்றோம்.

நிதியளிப்பு விழாவில்
நிதியளிப்பு விழாவில்

தாய்த் தமிழகத்தின் நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். காவிரிப் பிரச்னையில் களம் கண்டு போராடி இருக்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி என இன்று பல கட்சிகள் புதிய அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றால், இதற்கெல்லாம் முன்னோடி நாம்தான்” என்று பேசினார்.

பின்பு செய்தியாளர்களிடம் ;பேசியவர், “இந்த தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க-வை தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதற்காக தி.மு.க எங்களுக்கு எத்தனை இடங்கள் கொடுத்தலும் போட்டியிடத் தயாராக இருக்கிறோம். என் மகன் தேர்தலில் போட்டியிடவில்லை” என்று பேசினார்.

மதுரையில் வைகோ பேசியது வழக்கமான பேச்சாக இல்லை என்றும், அவர் பேச்சிலிருந்த கம்பீரம் குறைந்து விரக்தி வெளிப்படுகிறது என்றும் ம.தி.மு.க தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே