வெறும் ரூ.6,990 க்கு கேலக்ஸி A01 கோர்; மிரட்டும் சாம்சங்; ரெட்மி, ரியல்மி பட்ஜெட் போன்லாம் கொஞ்சம் ஓரம்போ!

சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனை பற்றிய தகவல்கள் சில காலமாக கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக சீன தயாரிப்புகளுக்கு எதிரான போக்கு இந்தியர்களின் மனதில் இன்னமும் நிலவிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில்!
அதுமட்டுமன்றி சாம்சங் கேலக்ஸி ஏ தொடர் ஸ்மார்ட்போன்களுக்கென்றே இந்தியாவில் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் மாடலானது நிச்சயமாக ஒரு நுழைவு நிலை Android Go ஸ்மார்ட்போனாக இருக்கும் என்கிற பட்சத்தில் அந்த ரசிகர் கூட்டம் இன்னும் விரிவடையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே பிரேசில் மற்றும் இந்தோனேசிய தரச்சான்றிதழ் ஆணையத்தில் ஒப்புதல் பெற்றுவிட்டது எனவே இதன் வெளியீடும் கூடிய விரைவில் நடைபெறலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஏற்கனவே இந்தியாவில் அதன் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஜூலை மாத இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு தகவலானது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் பிரத்தியேகமாக பகிர்ந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மிகவும் அடிப்படையாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் வளர்ந்து வரும் சந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது, அதாவது மிகப்பெரிய விலையை கொடுக்க விருப்பம் இல்லையென்றாலும் கூட பெரிய டிஸ்பிளே மற்றும் வசதியான இணைய அணுகல் கொண்ட ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க விரும்பும் மக்களை இது குறிவைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A01 கோர் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

சாம்மொபைல் தளத்தின்படி, வரவிருக்கும் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் எம்டி 6739 சிப்செட் இடம்பெறும். இந்த SoC உடன் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும், இதில் 1480 × 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் இருக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட எஃப் / 2.2 லென்ஸ் உடனான 8 மெகாபிக்சல் பின்புற கேமரா இடம்பெறும். முன்பக்கத்தில், எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டிருக்கும்.

கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 (கோ பதிப்பு) இயக்க முறைமையின் கீழ் இயங்கும், மற்றும் ஒரு 3,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகள் மற்றும் டூவயல் சிம் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ஆனது நீக்கக்கூடிய பேட்டரி போன்ற கடந்த கால அம்சத்தை வழங்குகிறது. இருப்பினும் கேலக்ஸி A01 கோர் ஸ்மார்ட்போனின் மற்ற சில அம்சங்களை பற்றிய தகவல்களை பெற நாம் இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதன் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் முன்னர் வெளியான ஸ்மார்ட்போன்களை வைத்து பார்க்கும் போது இது ரூ.6,990 என்கிற சூப்பர்-பட்ஜெட் விலை நிர்ணயத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே