நிர்மலா சீதாராமன் அறிவித்த கொரோனா வைரஸ் பொருளாதார உதவி தொகுப்பு குறித்த முழு விவரங்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அறிவித்த ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்’ (தற்சார்பு இந்தியா திட்டம்) என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுகிறார்.

“நேற்று தொலைநோக்கான ஒரு திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே மிகவும் விரிவாக நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் வழங்கிய ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இந்த உதவி தொகுப்பு தயார் செய்யப்பட்டுள்ளது,” என்றார் நிர்மலா சீதாராமன்.

இந்திய பொருளாதாரத்தை தன்னிறைவு மிக்கதாக மாற்றும் நோக்கிலேயே இந்த உதவி தொகுப்புக்கு ‘சுயசார்பு பாரதம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது என்றார் நிதியமைச்சர்.

நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு குறித்த விவரங்களை அறிவிக்கும் முன்பு இதுவரை இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை தனது செய்தியாளர் சந்திப்பின்போது நிர்மலா சீதாராமன் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் பட்டியலிட்டனர்.

இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம், ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துதல், உள்ளிட்டவை இந்த காலங்களில் மக்களுக்கு பலனளித்து தாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

15 அம்ச திட்டம்
இந்த பொருளாதார உதவித் தொகுப்பில் 15 அம்ச திட்டங்களை இந்திய அரசு வகுத்துள்ளது என்று தெரிவித்த நிர்மலா அவற்றை அறிவித்து வருகிறார்.

 1. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்கம், 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கடன்களின் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும்.
 2. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிறுவனங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை வழங்குவதற்காக நிதியம் மற்றும் துணை நிதியங்கள் உருவாக்கப்படும். இது அந்த நிறுவனங்கள் உற்பத்தி திறன் மற்றும் அளவில் விரிவாக உதவும்.
 3. நலிவடைந்த மற்றும் செயல்படாத சொத்துக்களை கொண்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் துணைக் கடன் வழங்கப்படும்.
 4. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வகுத்திருந்த வரையறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் 5 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் தொழில் செய்யும் நிறுவனங்கள் குரூ நிறுவனங்களாகவும், 10 கோடி ரூபாய் முதலீடு செய்து 50 கோடி ரூபாய் வரை ஆண்டு வணிகம் செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், 20 கோடி ரூபாய் முதலீட்டில் 100 கோடி ரூபாய் வரை ஆண்டு வணிகம் செய்யும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
 5. இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படும் நோக்கில் 200 கோடி ரூபாய் வரையிலான மதிப்புள்ள டெண்டர்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பது தடைசெய்யப்படும். அதற்கேற்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்படும்.
 6. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு 100% கடன் உத்தரவாதம் வழங்கப்படும். இதன் மூலம் 45 லட்சம் நிறுவனங்கள் பலனடையும்.
 7. மார்ச் மாதம் இந்திய அரசு அறிவித்திருந்த உதவி தொகுப்பில், குறிப்பிட்ட வரையறைக்குள் வரும் சிறிய தொழில் நிறுவனங்களில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர் வைப்பு நிதிக்காக நிறுவனங்கள் மற்றும் தொழிலார்கள் செலுத்த வேண்டிய தொகையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
 8. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட உதவி தொகுப்பின் வரையறைக்குள் வராத ஊழியர்களுக்கு வழங்கப்படும் வைப்பு நிதிக்காக தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகையின் விகிதம் 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு குறைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 4.3 கோடி தொழிலாளர்களும், 6.5 லட்சம் நிறுவனங்களும் பயனடைவர், இதற்காக 6,750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 9. வங்கியல்லாத தொழில் நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, அந்த நிறுவனங்கள் வழங்கும் வழங்கும் கடனுக்கு இந்திய அரசு பகுதி அளவு உத்தரவாதம் அளிக்கும். இந்த கடன்கள் மூலம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் முதல் 20 சதவிகித இழப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 10. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
 11. மின்சார விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகைகளின் பெயரில் அந்த நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். இந்திய மின் விநியோக நிறுவனங்கள் தற்போது தங்களின் சேவை வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையாக 94 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது.
 12. இந்திய ரயில்வே, இந்திய நெடுஞ்சாலை துறை, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பணிகளை முடிப்பதற்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்படும்.
 13. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் வீட்டுவசதி வாரியங்கள் மார்ச் 25 அல்லது அதற்கு பின்பு முடிவடையும் கட்டுமானத் திட்டங்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவுறுத்தும்.
 14. டிடிஎஸ் (TDS) மற்றும் டிசிஎஸ் (TCS) வரி பிடித்தங்கள் தற்போது உள்ள அளவில் இருந்து 25 சதவிகிதம் குறைக்கப்படும். இது இந்த நிதியாண்டின் மீதமுள்ள பகுதி முழுவதும், அதாவது 31 மார்ச் 2021 வரை அமலில் இருக்கும். இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
 15. 2019- 2020ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி 31 ஜூலை மற்றும் 31 அக்டோபர் 2020 எனும் தேதியிலிருந்து 30 நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

“கோவிட்-19 பரவலால் உண்டாகியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக இந்திய அரசு ஏற்கனவே அறிவித்த உதவித்தொகுப்பு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த உதவித் தொகுப்பு மற்றும் தற்போதைய உதவித் தொகுப்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 10%,” என்று மோடி தனது உரையின்போது கூறினார்.

இந்திய நிதியமைச்சர் இதுகுறித்த விவரங்களை விரிவாக அறிவிப்பார் என்று மோடி தெரிவித்தார்.

ஊரடங்கு அமலானபின், மார்ச் மாத இறுதியில் 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித்தொகுப்பை நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

பொருளாதார உதவித் தொகுப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நான்காம் கட்ட ஊரடங்கு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை செவ்வாயன்று மோடி வெளியிட்டிருந்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே