வுகான் டூ மாமல்லபுரம் வரை: மோடி – ஜின்பிங் வரலாற்றுச் சந்திப்பின் பின்னணி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சீனாவின் புகழ்பெற்ற வுகான் அருங்காட்சியகத்தில் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்-கை சந்தித்த நிலையில், தற்போது அதே பாணியில் பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை ஜீ ஜின்பிங் சந்திக்கிறார்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரம் வர உள்ள நிலையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வுகான் மாகாணத்தில் அவரை சந்தித்து பேசியது இருதரப்பு உறவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த 54 ஆண்டுகளில் சீன அதிபருடன் இந்திய பிரதமர் ஒருவர் அரசு முறை அல்லாத சந்திப்பை நிகழ்த்தியது அப்போதுதான் முதன்முறையாக நடைபெற்றது.

வுகானில் இருந்த டெரகோட்டா அருங்காட்சியகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தியா சீனா இடையே அப்போது டோக்லான் பிரச்சினை தீவிரமாக இருந்த நேரத்தில் நடந்த இந்த சந்திப்பு உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

வுகான் சந்திப்புக்கு பின் இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு ஏற்பட்டிருப்பதாக இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சீனாவின் கிண்டாவோ என்ற இடத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டத்தின் போதும், தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போதும் மோடியும், ஜீ ஜின்பிங்கும் சந்தித்து கொண்டனர்.

அப்போதே வுகானுக்கு அடுத்தபடியாக தங்களது நட்பு ரீதியிலான சந்திப்பு இந்தியாவில் தான் நிகழும் என தெரிவித்து இருந்தனர்.

எனினும் அமெரிக்காவுடன் நீடித்துவரும் வர்த்தகப்போர் காரணமாகவே இந்தியாவுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள சீனா கருதுவதாகவும், அதற்கு அடிப்படையாகவே மாமல்லபுரம் சந்திப்பு நிகழ்வதாகவும் வெளியுறவு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தவிர, அமெரிக்காவில் நடந்த ஹௌடி மோடி நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து டிரம்ப் உடனான மோடியின் சந்திப்பு ஆகியவற்றையும் சீன அதிபரின் இந்திய வருகைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எப்போதெல்லாம் அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்குவது போன்ற தோற்றம் உருவாகிறதோ, அப்போதெல்லாம் சீனா இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகின்றனர் விமர்சகர்கள்.

சீனாவின் வுகான் அருங்காட்சியகத்தில் கலைநயத்துடன் கூடிய சிற்பங்களை பார்வையிட்டபடி ஜீ ஜின்பிங்-கை சந்தித்து இருப்பதால், அதேபோல் இந்தியாவில் கலைநயமிக்க பகுதியில் மோடியுடனான சந்திப்பை நடத்த ஜீ ஜின்பிங் மாமல்லபுரத்தை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே